ரயில்வே தண்டவாளத்தில் இரும்பு ராடு.. சிக்னல் துண்டிப்பு.. மர்ம நபர்கள் சதி.. அடுத்து நடந்தது?
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே ரயில்வே தண்டவாளத்தில் இரும்பு ராடை வைத்து சிக்னலை துண்டித்து விபத்து ஏற்படுத்த முயற்சி செய்த மர்ம நபர்கள் குறித்து காட்பாடி ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உரிய நேரத்தில் ரயில் தண்டவாளத்தில் இருந்த இரும்புக் கம்பியை ரயில்வே ஊழியிர்கள் அகற்றியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
ரயில்வே தண்டவாளத்தில் சில்லறை காசுகளை வைத்து குழந்தைப் பருவத்தில் ரசித்த சம்பவங்களைப் பார்த்திருப்போம். ஆனால், தற்போது நடக்கும் சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. ஆயிரக்கணக்கானோர் வேலை நிமித்தமாகவும், கல்விக்காகவும் என பல்வேறு பணிகளுக்காக ரயில் சேவையைப் பயன்படுத்துகின்றனர். பச்சிளம் குழந்தைகள் முதல் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்யும் ரயிலை விபத்துக்குள்ளாக்கும் சில சமூக விரோத செயல்களும் அரங்கேறி வருகின்றனர்.

பின்விளைவுகளை அறியமால் ரயில்வே தண்டவாளத்தில் இரும்புக் கம்பிகள், மரக்கட்டைகள் உள்ளிட்ட பொருள்களை விளையாட்டாக வைக்கின்றனர். இதுபோன்ற செயல்கள் பெரும் விபத்தை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும். இந்நிலையில், ராணிப்பேட்டை அருகே ரயில்வே தண்டவாளத்தில் இரும்பு ராடை வைத்து, சிக்னலை துண்டித்து விபத்து ஏற்படுத்த முயன்ற மர்ம நபர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகுந்தராயபுரம் ரயில் நிலையம் அருகே சென்னை- பெங்களூர் மார்க்கத்தில் சனிக்கிழமை சிக்னல் துண்டிக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, சென்னை- பெங்களூர் ரயில் தடத்தில் இரண்டு பாதைகளுக்கிடையே இரும்பு ராடை வைத்து மர்ம நபர்கள் தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து, ஊழியர்கள் உடனடியாக அந்த இரும்பு ராடை அகற்றி சிக்னலை சரி செய்தனர். அச்சமயத்தில் ரயில் போக்குவரத்து எதுவும் இல்லாததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, முகுந்தராயபுரம் ரயில் நிலைய மேலாளர் காட்பாடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் மோப்ப நாய் சார்லஸ் உதவியுடன் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில்வே ஊழியர்கள் உரிய நேரத்தில் இரும்புக் கம்பியை அகற்றியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications