சகாயத்திற்கு மிரட்டல் விடுத்துக் கடிதம்... குற்றவாளியைத் தேடி கொடுமுடியில் போலீஸ் முகாம்
மதுரை: கிரானைட் முறைகேடு குறித்த விசாரணைக் குழுத் தலைவரான சகாயம் ஐ.ஏ.எஸ்சிற்கு மிரட்டல் கடிதம் வந்தது தொடர்பாக ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் தனிப்படை போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்ட கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடு குறித்து விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் இருந்து குமார் என்ற பெயரில் மிரட்டல் கடிதம் சென்றது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக தற்போது போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர். ஒரு தனிப்படை போலீஸார் கொடுமுடி விரைந்துள்ளனர். அங்கு கடிதம்அனுப்பப்பட்ட முகவரிக்குச் சென்று பார்த்தபோது அங்கு குமார் என்ற பெயரில் ஒருவர் இருப்பதும், அவரது மனைவி பிரமீளா ராணி நெடுஞ்சாலைத் துறையில் உதவிப் பொறியாளராக இருப்பதும் தெரிய வந்தது.
அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் தாங்கள் மிரட்டல் கடிதம் அனுப்பவில்லை என்று அவர்கள் போலீஸாரிடம் கூறியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து இவர்களுக்கு வேண்டப்படாத சிலர் இவர்கள் பெயரில் கடிதம் எழுதியுள்ளார்களா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் மற்றும் உறவினர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் கொடுமுடியில் முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார் கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications
