அலங்காநல்லூரில் 10 பேருடன் போலீஸ் பேச்சுவார்த்தை- இளைஞர்களை விடுவிக்க சம்மதம்
அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக் கோரி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து 10 பேரை பேச்சுவார்த்தைக்கு காவல்துறையினர் அழைத்துச்சென்றுள்ளனர்.
மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிக்கு பிரசித்தி பெற்ற அலங்காநல்லூரில் நேற்றைய தினம் திரண்ட ஏராளமான இளைஞர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு நடத்தும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி விடிய விடிய அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர்களை, போலீசார் இன்று காலையில் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
தங்களது ஊருக்கு வந்து தங்களுக்கு ஆதரவாகவும் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர்களை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்த அலங்காநல்லூர் பொதுமக்கள், பேரணியாக சென்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இன்றும் அலங்காநல்லூர் போர்களமாக மாறியுள்ளது. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்தது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் விடுவிக்கப்படுவார்கள் என மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் உறுதி அளித்தார். மேலும், அமைதியான போராட்டக்கு காவல்துறை அனுமதி வழங்கி ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவரது சமாதானத்தை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். இந்த போராட்டத்தில் நடிகரும், சினிமா தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் ஈடுபட்டார். போராட்டம் தீவிரமடையவே, ஆர்.கே. சுரேஷ் உடன் உள்ளூர்வாசிகள் 10 பேரை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர்கள் முன்னிலையில் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதாரி உறுதியளித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்து அழைத்து வரும் வரை பொதுமக்கள் இங்கிருந்து நகரவேண்டாம் என்று கூறிவிட்டு 10 பேர் பேச்சு வார்த்தைக்குச் சென்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications
