பொள்ளாச்சி மாணவிகள் பலாத்காரம்: கோவை வாலிபர் கைது!
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த இரண்டு மாணவிகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த கோவையை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பழைய பஸ் நிலையம் அருகே டி.இ.எல்.சி. தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயம் சார்பாக அதே வளாகத்தில் மாணவ-மாணவிகள் விடுதி செயல்பட்டு வந்தது. இங்கு 17 மாணவர்களும், 3 மாணவிகளும் தங்கியிருந்தனர்.
புதன்கிழமை நள்ளிரவு விடுதிக்குள் புகுந்த இரு மர்மநபர்கள், அங்கிருந்த 11 வயது, 10 வயது மாணவிகள் இருவரை விடுதி வளாகத்தில் உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.
மாணவிகளுக்கு ரத்தப் போக்கு அதிகமாகவே வாலிபர்கள் இருவரும் தப்பி ஓடி விட்டனர்.
இதற்கிடையே 2 மாணவிகள் மாயமாகி விட்டதாக பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விடுதி வளாகத்தில் தேடினார்கள். அப்போது விடுதி மாடியில் 2 மாணவிகளும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
போலீசார் இருவரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சப் கலெக்டர் ஆய்வு
தனியார் விடுதியை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சப் கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே, இந்த விடுதி அரசு அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்துள்ளது. மேலும், மாணவ, மாணவிகள் தங்குவதற்கான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. எனவே, இந்த விடுதியை மூட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.
இங்கு தங்கி படித்து வந்த அனைத்து பள்ளி குழந்தைகளையும் கோவையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்கி படிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

விடுதிக்கு சீல்வைப்பு
சப் கலெக்டரின் உத்தரவினைத் தொடர்ந்து அந்த விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அங்கிருந்த மாணவ - மாணவிகள் அனைவரும் கோவைக்கு கொண்டு வரப்பட்டனர்.

அரசு காப்பகத்தில் மாணவர்கள்
மாணவர்கள் அனைவரும் உக்கடத்தில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். மாணவிகள் கோவை கணபதியில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவிகள் 2 பேரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

முதல்வர் உத்தரவு
விடுதி வளாகத்தில் மாணவிகள் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா போலீசுக்கு உத்தரவிட்டார்.

தனிப்படை போலீஸ்
அவரது உத்தரவின் பேரில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் நேரடி மேற்பார்வையில் பொள்ளாச்சி துணை சூப்பிரண்டு முத்துராஜன் தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டது.

சிறுமிகளிடம் பலாத்காரம்
முதல் கட்டமாக பொள்ளாச்சி பகுதியில் சிறுமிகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் காமக் கொடூரர்கள் யார்? என்று பட்டியலிட்டனர். அப்போது பொள்ளாச்சி சி.டி.சி. மேடு பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவன்தான் முதலிடத்தில் இருப்பது தெரியவந்தது. உடனே அவனை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

கொடூரன் யார்?
கோபிநாத்திடம் போலீஸ் பாணியில் விசாரித்தபோது அவன் கூறிய தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இரு தினங்களுக்கு முன் மது போதையில் அவனது நண்பன் வீராசாமிதான் மாணவிகளை பலாத்காரம் செய்ய திட்டம் தீட்டியதாக தெரிவித்தான்.திருப்பூரை சேர்ந்த வீராசாமி என்பவரும் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.

தேடுதல் வேட்டை .
இதன்மூலம் வீராசாமிக்கும் அவரது நண்பருக்கும் இந்த பாலியல் பலாத்கார விவகாரத்தில் தொடர்பு இருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
குற்றவாளிகள் யார் என்ற அடையாளம் தெரிந்து விட்டதால் அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இது பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உயர் போலீசார் தெரிவித்தனர்.

பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம்
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது (366)-இளம் பெண்ணை கடத்துதல், வன்கொடுமை தடுப்பு அவசர திருத்த சட்டம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications