தமிழக காங்கிரசின் கோஷ்டி கலாட்டா …. ராஜினாமா முடிவில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் நடக்கும் உள்கட்சி கும்மாங்குத்து டெல்லி வரை எதிரொலித்துள்ளது. ப.சி, இளங்கோவன் கோஷ்டி ஆதரவாளர்களுக்கு இடையேயான போஸ்டர் யுத்தமும் தீவிரமடைந்துள்ளது.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான பின்னர் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது சத்தியமூர்த்தி பவன்.
ஆனால் தலைவராக பதவியேற்று சில மாதங்களுக்குள்ளாகவே ராஜினாமா மூடுக்கு வந்துவிட்டாராம் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். என்னதான் நடக்கிறது சத்தியமூர்த்தி பவனில் படியுங்களேன்.

கார்த்தி கலாட்டா
சில தினங்களுக்கு முன்பு கார்த்தி சிதம்பரம் நடத்திய ரகசிய கூட்டமும் காமராஜர் ஆட்சி தொடர்பாக கார்த்தி தெரிவித்த கருத்தும்தான் சர்ச்சைக்கு விதை போட்டது. இது பற்றி விளக்கம் கேட்டு, அவருக்கு இளங்கோவன் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அதற்கெல்லாம் தான் பதில் சொல்ல முடியாது என்று கெத்து காட்டினார் கார்த்தி சிதம்பரம்.

வம்பில் சிக்கிய ஈ.வி.கே.எஸ்
காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் ஜெயந்தி நடராஜன் விலகியபோது, வாயை கொடுத்து புண்ணாக்கிக் கொண்டார் இளங்கோவன். அரிசி பஞ்சம் பற்றி பேசி ஜெயந்தியின் தாத்தா பக்தவச்சலத்தையும் சாடினார். அது மட்டுமல்லாமல் வாரிசோடு மற்றொரு தலைவரும் விலகினால் காங்கிரஸ் கட்சிக்கு விமோசனம் என்றும் இளங்கோவன் கூறினார்.

ப.சி. பஞ்சாயத்து
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த ப.சிதம்பரம், இங்கிருந்து ஒவ்வொருவராக வாசன் அணிக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பை இளங்கோவன் செய்து வருகிறார் கடைசியில் ஒருநாள் அவரும் அங்கு போய்விடுவார் என்று முறையிட்டுள்ளார்.
இதையடுத்து, டெல்லி வரும்படி இளங்கோவனுக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

சோனியா கண்டிப்பு
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போனில் தொடர்பு கொண்டு இளங்கோவனை கண்டித்தாராம். சோனியாவின் உடனடி நடவடிக்கைக்கு ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி சென்னையில் ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

போஸ்டர் ஓட்டுவோம்ல
ப.சிதம்பரத்தின ஆதரவாளரும், சேவாதள அமைப்பு செயலாளருமான எஸ்.எம்.குமார் பெயரில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், ‘‘காங்கிரஸ் தவைர்களை விமர்சித்த இளங்கோவனை கண்டித்த சோனியாவுக்கு காங்கிரஸ் தொண்டர்களின் கோடானு கோடி நன்றி" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரசாரத்திற்கு வந்தேன்
ஆனால் தனக்கு சம்மன் எதுவும் வரவில்லை என்றும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழர்கள் வசிக்கும் பகுதியில் பிரசாரம் செய்வதற்காக வந்ததாக இளங்கோவன் கூறி சமாளித்தார்.

தொலைபேசியில் விளக்கம்
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு திங்கள்கிழமை காலையில் இளங்கோவன் வந்தார். தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கை ஒருமணிநேரம் சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் கேட்டதற்கு, "கார்த்தி சிதம்பரம் விஷயத்தில் என்னை விளக்கம் அளிக்கும்படி கட்சி மேலிடம் கேட்கவில்லை. இது குறித்து ஏற்கெனவே நான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தொலைபேசியில் விளக்கம் அளித்து விட்டேன் என்றார்.

மேலிடம் முடிவெடுக்கும்
கார்த்தி சிதம்பரத்திடம் விளக்கம் கேட்டு நான் அனுப்பிய நோட்டீசுக்கு அவர் அனுப்பிய கடிதத்தை காங்கிரஸ் மேலிடத்துக்கு அனுப்பி விட்டேன். இனி இந்த விஷயத்தில் காங்கிரஸ் மேலிடம்தான் முடிவெடுக்கும் என்று கூறினார்.

இளங்கோவனுக்கு எதிராக
அதேசமயம் இளங்கோவனை கண்டித்து ஈரோடு உள்ளிட்ட சில இடங்களிலும் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இளங்கோவனை பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்கள் போர்கொடி உயர்த்தியுள்ளனர்.

ராஜினாமா மூடில்
கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி கும்மாங்குத்துக்களால் டென்சன் ஆகியுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் மூடில் இருப்பதாகவும் சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications