மீண்டும் தலைவிரித்தாடும் மின்வெட்டு பிரச்சனை: ராமதாஸ் தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் மின்வெட்டு போக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து தான் முதலமைச்சர் ஆட்சிக்கு வந்தார். அதன் பின்னர் இன்று வரை 10 முறை 3 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் மின்வெட்டுக்கு தீர்வு காண அவரால் முடியவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் காற்றாலைகளின் ஆதரவால் கடந்த சில வாரங்களாக ஓய்ந்திருந்த மின்வெட்டு இப்போது மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கியிருக்கிறது. சென்னை மாநகரம் தவிர மாநிலத்தின் மற்ற அனைத்துப் மாவட்டங்களும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன.

Power cut issue: Ramadoss slams ADMK government

அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் மின்வெட்டு போக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து தான் முதலமைச்சர் ஆட்சிக்கு வந்தார். அதன் பின்னர் இன்று வரை 10 முறை 3 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் மின்வெட்டுக்கு தீர்வு காண அவரால் முடியவில்லை.

கடந்த ஜூலை மாதம் முதல் காற்றாலை மின்னுற்பத்தி அதிகரித்ததால் மின்வெட்டு குறைந்திருந்தது. ஆனால் காற்றாலை மின் உற்பத்தி கைவிட்டதாலும், மின்னுற்பத்தி நிலையங்கள் செயலிழந்ததாலும் தமிழகத்தில் மீண்டும் கடுமையான மின் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தின் மின் தேவை 13 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்துள்ள நிலையில், தனியாரிடமிருந்து வாங்கப்படுவது உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களில் இருந்தும் 9000 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது. மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு மின்பற்றாக்குறை இருப்பதால் தினமும் 8 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பகலில் மட்டுமின்றி, இரவிலும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் மாவட்டங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டு பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மையே இதற்கு காரணமாகும்.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 3 மின் நிலையங்கள் உட்பட மொத்தம் 7 மின் நிலையங்களில் உள்ள 11 அலகுகள் செயல்படாததால் மொத்தம் 2740 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இதை சரி செய்ய வேண்டிய மின்துறை அமைச்சரோ, அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஏற்காடு தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

மின்சாரத் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்ற அக்கறை அதிமுக அரசுக்கு ஒரு போதும் இருந்ததில்லை. அதற்காக எந்த நடவடிக்கையையும் இந்த அரசு மேற்கொள்ளவில்லை. கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் மின்னுற்பத்தி தொடர்பாக முதலமைச்சர் அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப் படவில்லை.

ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் மின்வெட்டு போக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தாலும், 2012 ஆம் ஆண்டு இறுதி வரை ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கூடுதலாக உற்பத்தி செய்யப்படவில்லை. நடப்பாண்டில் மேட்டூர் மற்றும் வடசென்னை புதிய அனல் மின் நிலையங்கள் உற்பத்தியைத் தொடங்கிய போதிலும் அவை தற்போது செயலிழந்துவிட்டன.

கூடங்குளம் அணு மின் நிலையம் உற்பத்தியைத் தொடங்கினால் தமிழகம் பிரகாசிக்கும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது. அங்கு உற்பத்தி தொடங்கப்பட்டு விட்டதாக கூறப்படும் நிலையில் உற்பத்தியாகும் மின்சாரம் எங்கு செல்கிறது என்பது தான் தெரியவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டப் பேரவையில் பேசிய முதலமைச்சர் ஜூன் மாதத்திற்குப் பிறகு தமிழகத்தில் மின் வெட்டு இருக்காது என்று உறுதியளித்தார். கடந்த மாதம் சட்டப்பேரவையில் விவாதம் ஒன்றிற்கு விடையளித்த அவர், தமிழகம் தற்போது 99% மின்மிகை மாநிலமாகிவிட்டது; இந்த ஆண்டு இறுதிக்குள் 100% மின்மிகை மாநிலமாகி விடும் என்று கூறினார். ஆனால் தமிழகத்தில் தற்போது 8 மணி நேர மின்வெட்டு நிலவுகிறது. இதுதான் மின்மிகை மாநிலத்திற்கான அடையாளமா என்பதை முதலமைச்சர் தான் விளக்க வேண்டும்.

2011 ஆம் ஆண்டு பதவியேற்ற அதிமுக அரசு முறையாக திட்டங்களை வகுத்து செயல்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் எந்த புதிய மின் திட்டத்திற்கான பணியும் தொடங்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட 11,960 மெகாவாட் திறன்கொண்ட 9 மின் திட்டங்கள் இன்று வரை அறிவிப்பு நிலையில் தான் உள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி தமிழகத்திற்கான சூரிய ஒளி மின் கொள்கையை வெளியிட்ட முதலமைச்சர், ஆண்டுக்கு 1000 மெகாவாட் வீதம் 3 ஆண்டுகளில் 3 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று கூறினார். அதன் பின் ஓராண்டு முடிந்துவிட்ட நிலையில் ஒரு மெகாவாட் கூட உற்பத்தி செய்யப்படவில்லை.

மொத்தத்தில் மின்னுற்பத்தி தொடர்பாக வாக்குறுதிகளை மட்டுமே வாரி வழங்கி வரும் தமிழக அரசு அவற்றை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்னுற்பத்தியில் அதிமுக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது. இதனால் தமிழகத்தின் வளர்ச்சியும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இனியாவது வெற்று வாக்குறுதிகளை அளிக்காமல், மின்வெட்டை போக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+