குரோம்பேட்டையில் விபத்தில் சிக்கி நிறைமாத கர்ப்பிணி இறப்பு- வயிற்றில் இருந்த குழந்தையும் பலி
சென்னை: சென்னை குரோம்பேட்டை பகுதியில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த ஜமீன்பல்லாவரம் பச்சையம்மன் காலனி முதல் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவரது மனைவி பெயர் பிரியதர்ஷினி.
நிறைமாத கர்ப்பிணியான இவர் நேற்று மதியம் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைகள் செய்வதற்காக நாத்தனார் சிவரஞ்சனியுடன் ஸ்கூட்டரில் சென்றார்.
மருத்துவ பரிசோதனைகள் முடிந்தபின் சிவரஞ்சனியுடன் ஸ்கூட்டரின் பின் இருக்கையில் அமர்ந்து பல்லாவரத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார். குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரி சிக்னலில் இருந்து ஜி.எஸ்.டி. சாலையில் செல்ல சிவரஞ்சனி வண்டியை திருப்பினார்.
அப்போது பின்னால் குரோம்பேட்டையில் இருந்து பல்லாவரம் நோக்கி அதிவேகமாக மணல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பிரியதர்ஷினி மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பிரியதர்ஷினியின் வயிற்றில் இருந்த குழந்தை இறந்து விட்டது தெரியவந்தது. தொடர்ந்து சிகிச்சை பலன் அளிக்காமல் மாலையில் பிரியதர்ஷினி இறந்து போனார். விபத்து குறித்த போலீசார் விசாரணையில் பொழிச்சலூரை சேர்ந்த லாரி டிரைவர் பார்த்திபன் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications