நான் விஜயகாந்த் பற்றி எதுவும் விமர்சிக்கலை... பிரேமலதா தப்பா புரிஞ்சுகிட்டார்... வைகோ
விஜயகாந்த் பற்றி நான் விமர்சிக்கவில்லை என்றும், நான் கூறிய கருத்தை பிரேமலதா தவறாக புரிந்து கொண்டார் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
நெல்லை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை விமர்சித்ததாக வந்த செய்திக்கு மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ விளக்கம் அளித்துள்ளார்.
கலிங்கப்பட்டியில் இன்று பேசிய வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்தை எந்த சூழ்நிலையிலும் விமர்சிக்கவில்லை என்று கூறினார். மேலும், எனது பேட்டியை பிரேமலதா முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.
2016ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மதிமுக இணைந்து மக்கள் நலக்கூட்டணியை அமைத்தன. தேர்தல் நெருங்க நெருங்க, திமுக, அதிமுகவிற்கு எதிரான மனநிலையில் இருந்த மக்கள் இந்த கூட்டணிக்கு ஆதரவாக திரும்பினர். இந்த 4 கட்சிகள் இணைந்த கூட்டணியில் தேமுதிக இணைந்தது. அப்போதே அது பல விமர்சனங்களை சந்தித்தது. தொகுதி பங்கீடு முடிந்த பின்னர், ஜிகே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இந்த கூட்டணியில் இணைந்தது. முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவித்து தேர்தலை சந்தித்தது மக்கள் நலக்கூட்டணி. ஆனால் பரிதாப தோல்வியை இந்த கூட்டணி சந்தித்தது.

முதல்வர் வேட்பாளர்
இது குறித்து சில தினங்களுக்கு முன்பு பேட்டியளித்திருந்த வைகோ, தமிழக சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடந்தபோது மக்கள் நலக்கூட்டணி சார்பில் யாரையும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம். ஆனால் தி.மு.க.விடம் கூட்டணி அமைக்காமல் எங்கள் கூட்டணிக்கு விஜயகாந்த் வந்ததால் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தோம் என்று கூறினார். எங்கள் நிலைப்பாட்டில் இருந்து மாறி விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது தவறுதான் என்றும் கூறியிருந்தார்.

பிரேமலதா கோபம்
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதாவிடம் வைகோவின் கருத்து குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், வைகோ தினமும் ஒரு கருத்தை கூறுவார். தினமும் உணர்ச்சிவசப்படக் கூடியவர். அவர் சொல்லும் கருத்துகளுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தே.மு.தி.க.வுடன் கூட்டணி வேண்டும் என்று அவர்தான் தேடி வந்தார். இப்போது விமர்சனம் செய்கிறார். இதற்கு அவர்தான் பதில் சொல்லவேண்டும் என்று கூறவே பரபரப்பு பற்றிக்கொண்டது.

வைகோ விளக்கம்
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்திற்கு இன்று காலை வந்த வைகோவிடம், பிரேமலதா பதில் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த வைகோ, கால சூழ்நிலைக்காக அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டது என்றும் நான் கூறியிருந்தேன். அதனை யாரும் பெரிதாக போடவில்லை. தவறாக சொல்லிவிட்டார்கள். சகோதரி பிரேமலதாவின் பேட்டியை பத்திரிகை வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் அறிந்தேன். திமுக கூட்டணியில் பணமும், அதிக தொகுதிகளையும் தருவதாக கூறியும் அங்கு செல்லாமல் மக்கள் நலக் கூட்டணிக்கு வந்த விஜயகாந்த் மனதை நான் பாராட்டுகிறேன். நான் சொன்னது தவறுதான் என்று கூறினார்.

தவறாக புரிந்து கொண்டார்
இதனிடையே இதே கருத்து குறித்து கலிங்கபட்டியில் செய்தியாளரிடம் பேசிய வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றி நான் கூறிய கருத்தை சகோதரி பிரேமலதா அவர்கள் தவறாக புரிந்து கொண்டதாக கூறினார். என்னுடைய பேட்டியில் நான் கூறிய கருத்தை பிரேமலதா சரியாக புரிந்து கொண்டிருந்தால் அவர் இவ்வாறு கூறியிருக்க மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார் வைகோ. வைகோவின் பதிலுக்கு பலவித எதிர்வினைகள் வெளியாகத் தொடங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications