குதிரை பேரம் நடந்ததா.. முகத்தை மூடிக்கொண்டு வந்தது யார்? விஜய்யை நெருக்கும் பிரேமலதா விஜயகாந்த்
சென்னை: தவெக எந்தவித குதிரை பேர அரசியலிலும் ஈடுபடவில்லை என்பதை முதல்வர் விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். முகத்தை மூடிக்கொண்டு வந்தவர் யார் என்பதை மக்களிடம் கூற வேண்டும் என்று கூறியுள்ள பிரேமலதா விஜயகாந்த், அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவர்களும் எந்த நிபந்தனையும் இல்லாமல் ஆதரவை அறிவித்தால் தான், எந்தவித குதிரை பேரமும் நடக்கவில்லை என்று மக்கள் நம்புவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து தவெக ஆட்சியில் உள்ளது. தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்துள்ளது. விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுகவில் இருந்து எஸ்பி வேலுமணி தலைமையில் இருக்கும் 25 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

அதேபோல் அமமுக எம்எல்ஏ காமராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக அதிமுக மற்றும் அமமுக தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிமுக தரப்பில் ஆதரவளித்த சிலருக்கு அமைச்சர் பதவி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுதொடர்பாக சட்டசபையிலும் முதல்வர் விஜய்யிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு முதல்வர் விஜய், நாங்கள் குதிரை பேரத்தில் ஈடுபடும் கட்சியல்ல.. குதிரை வேகத்தில் செயல்படும் கட்சி என்று பதில் அளித்தார். இருந்தாலும் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு விஜய் முழுமையாக பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தமிழக அரசில் எந்தவித குதிரைப் பேர அரசியலும் இல்லை என்பதை முதலமைச்சர் விஜய் தெளிவுபடுத்த வேண்டும். மதச்சார்பற்ற வெற்றி கூட்டணி சேர்ந்தவர்கள் எவ்வாறு நிபந்தனை இல்லாத ஆதரவு என்று வெளிப்படையாக தெரிவித்தார்களோ, அதேபோல் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவர்களும் தங்களின் ஆதரவை எந்த நிபந்தனையும் இல்லாமல் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
அப்போது தான் குதிரைப் பேரம் நடைபெறவில்லை என்பதை மக்கள் நம்புவார்கள். மேலும், முகத்தை மூடிக்கொண்டு வந்தவர் என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்துவதோடு, அதற்கு பின்பு எந்தவிதமான குதிரை பேரமும் நடக்கவில்லை என்பதையும் மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications