சொன்ன வார்த்தையை காப்பாத்துங்க.. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவது அதிமுகவின் கடமை! பிரேமலதா தடாலடி
புதுக்கோட்டை: தேமுதிகவிற்கு மாநிலங்களவை எம்.பி சீட் வழங்குவது அதிமுகவின் கடமை என்றும் எடப்பாடி பழனிசாமி சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அன்புமணி ராமதாஸ், சண்முகம், சந்திரசேகரன், எம்.எம்.அப்துல்லா, பி.வில்சன், வைகோ ஆகியோரின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது.

ராஜ்யசபா சீட்
இதனையடுத்து தமிழகத்தில் இருந்து மீண்டும் 6 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதற்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது.
அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளின் உதவியோடு 2 இடங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளது. அதிமுக கூட்டணியில் ராஜ்யசபா தேர்தல் வாய்ப்பு தருவதாக, கடந்த லோக்சபா தேர்தலின்போது தேமுதிகவுக்கு வாய்மொழி உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன்படி தங்களுக்கு சீட் கிடைக்கும் என தேமுதிக எதிர்பார்ப்பில் உள்ளது. ஆனால், அப்படி எதுவும் உத்தரவாதம் தரவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியே கூறினார்.
அதிமுகவின் கடமை
இந்நிலையில், இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், "தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை. அதிமுக உடனான கூட்டணியில் மாநிலங்களவை இடத்தைப் பெறுவது தேமுதிகவின் உரிமை. 2024 மக்களவைத் தேர்தல் பேச்சுவார்த்தையின்போதே இந்த முடிவு எட்டப்பட்டது.
கடந்த மக்களவைத் தேர்தலில் 5 இடங்களுடன், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருகிறோம் என அதிமுக உறுதியளித்தது. அரசியலில் நம்பிக்கை முக்கியம்; வார்த்தைகள் முக்கியம். சொன்ன வார்த்தைகளைக் காப்பாற்றினால் தான் மக்கள் உங்களை நம்புவார்கள்.
2 முறை மிஸ் ஆகிடுச்சு
ஏற்கெனவே 2 முறை தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி கிடைக்க வேண்டியது. ஒரு முறை அன்புமணியும், இன்னொரு முறை ஜி.கே. வாசனும் பெற்றுக் கொண்டனர். அது பேச்சுவார்த்தையில் நாங்களும் ஒப்புக்கொண்டோம். சரி. அதன்பிறகு எங்களுக்கு கொடுப்பதாக உறுதியளித்தார்கள். இது எங்களின் முறை. எங்களுக்குத் தர வேண்டியது அவர்களின் கடமை." என்றார்.
சீட் மறுக்கப்பட்டால், தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், "பொறுத்தவர்கள் பூமி ஆள்வார்கள். நாங்கள் பதற்றமின்றி தெளிவாக உள்ளோம். மாநிலங்களவை சீட் கொடுக்கவில்லை என்றால் பின்னர் பார்த்துக்கொள்ளலாம். அப்போது அது குறித்து முடிவெடுக்கப்படும்" என்று பிரேமலதா தெரிவித்தார்.
சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும்
சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, "அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம். அதன்படி கமல்ஹாசன் அவர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது, அதை நாங்கள் வரவேற்கிறோம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்ன வார்த்தையை நிரூபிக்க வேண்டும்.
கூட்டணி, போட்டி விவரங்களை ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில்தான் அறிவிப்போம். விரைவில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமிக்கவுள்ளோம். தொடர்ந்து வாக்குச்சாவடி நிலையிலான குழுக்களை அமைக்கவுள்ளோம். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான். வரும் காலங்களில் அந்த நிலை உருவாகும்." என்று பிரேமலதா கூறியுள்ளார்.
வரும் 2026ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த நிலையில்தான் ராஜ்யசபா சீட் குறித்து வெளிப்படையாகவே டிமாண்ட் வைத்திருக்கிறார் பிரேமலதா.












Click it and Unblock the Notifications