தேர்தலில் ஜெயிக்க புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நடத்திய சத்ரு சம்ஹார யாகம்
புதுச்சேரி: சட்டசபை தேர்தலில் எதிரிகளை வீழ்த்தி வெற்று பெறுவதற்காக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று தனது வீட்டில் சத்ரு சம்ஹார யாகம் மற்றும் சிறப்பு ஹோமங்களை நடத்தியுள்ளார். ஆளுங்கட்சிக்கு வாக்களிப்பது தற்கொலைக்குச் சமமானது. காங்கிரஸ் - திமுக எதிரி என்றால் என்.ஆர். காங்கிரஸ் துரோகி என்றெல்லாம் ரங்கசாமிக்கு எதிராக அணுகுண்டுகளை வீசிவிட்டு வந்திருக்கிறார் ஜெயலலிதா.
மார்ச் 4ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது முதலே அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட பணிகளில் பரபரப்பாக இருக்கும் போது ரங்கசாமி ஆன்மீகப்பயணம் மேற்கொண்டார். தமிழகம், ஆந்திரா என ஒரு கோவில் விடாமல் சுற்றி வந்து விட்டார்.
அதே போல, தற்போது பிரசாரம், தேர்தல் அறிக்கை, வேட்பு மனு தாக்கல் என கோடை வெயிலோடு அரசியல் கட்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், நேற்று வரை வேட்பாளர் யார் என்றே அறிவிக்கவில்லை. புதன்கிழமையன்று மாலை 7 மணிக்கு மேல் 21 தொகுதி வேட்பாளர்களை அறிவித்தார் ரங்கசாமி.

புதுச்சேரி தேர்தல்
மே மாதம் 16ம் தேதி புதுச்சேரியில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. புதுவை மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் அதிமுக தனியாகவும், காங்கிரஸ்-திமுக கூட்டணி, மக்கள் நலக்கூட்டணி-தேமுதிக-தமாக கூட்டணி, போட்டியிடுகின்றன. அதே போல் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியும் தனித்துப் போட்டியிடுகிறது.

தனித்து களமிறங்கும் என்.ஆர். காங்கிரஸ்
கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்து வெற்றி பெற்றார். ஆனால் வரவுள்ள தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.

21 வேட்பாளர்கள் அறிவிப்பு
கோவில் கோவிலாக ஆன்மீகப் பயணம் சென்று வந்தார் ரங்கசாமி, வேட்பாளர் அறிவிப்பு எப்போது இருக்கும் என்று என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி அனைத்து கட்சியினரும் எதிர்பார்த்த நிலையில் புதன்கிழமை மாலை 21 வேட்பாளர்கள் பட்டியலை ரங்கசாமி வெளியிட்டார்.

மக்களுக்குத் தெரியும்
புதுச்சேரி மக்களுக்கு யார் முதல்வர் என்றும் யாருக்கு ஓட்டு போட்டால் நல்லது என்றும் தெரியும். கடந்த 5 ஆண்டு காலமாக புதுச்சேரியில் நான் செய்துள்ள நன்மைகள் எனக்கு வெற்றியை தேடி தரும் என்று நேற்று செய்தியாளர்களிடம் சொன்னார் ரங்கசாமி. 29ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வோம் என்று கூறிவிட்டு சிறப்பு ஹோமத்திற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கிவிட்டார் ரங்கசாமி.

சத்ரு சம்ஹார யாகம்
வியாழக்கிழமையன்று காலை 5 மணியளவில் தொடங்கிய சத்ரு சம்ஹார யாகம் காலை 10.30 வரை நடைபெற்றது. இந்த யாகத்தின்போது பட்டுப்புடவை உள்ளிட்ட பொருட்கள் ஹோம குண்டத்தில் போடப்பட்டன. வரும் தேர்தலில் எதிரிகளை வீழ்த்துவதற்காக முதல்வர் ரங்கசாமி இந்த யாகத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இவரது வெற்றிக்கு ஆன்மீக பயணம் கைகொடுக்கும? பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications