ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால்.. மநகூ கடும் எச்சரிக்கை
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் தமிழகம் தழுவிய போராட்டத்தை மேற்கொள்வோம் என்று மக்கள் நலக் கூட்டணி தலைவர்களாக திருமாவளவன், ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஆலங்குடியில் மக்கள் நலக் கூட்டியக்கத்தின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சிபிஎம் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ செயலாளர் முத்தரசன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஜி. ராமகிருஷ்ணன் கூறியதாவது:

வாழ்வாதாரம் பாதிப்பு
மண்ணெய் எடுக்க என்று தொடக்கத்தில் சொல்லிவிட்டு நெடுவாசலில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று ஹைட்ரோ கார்பன் என்று ஈத்தேன், மீத்தேன், எண்ணெய் எரிவாயு என்று சொல்லக் கூடிய அனைத்து வகையான எண்ணெய்யும் எடுப்பதற்கான திட்டம் இங்கு செயல்படுத்தப்பட உள்ளது. இது இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.

தமிழகம் தழுவிய போராட்டம்
இதனை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மாநில அரசு, மத்திய அரசை வலியுறுத்தி இந்தத் திட்டத்தை நிறுத்த கோரிக்கை வைக்க வேண்டும். மத்திய அரசு இந்தத் திட்டத்தை ரத்து செய்யவில்லை என்றால் மக்கள் நலக் கூட்டியக்கத்தின் சார்பாக நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசை எதிர்த்து விவசாயிகளை பாதுகாக்க போராடுவோம்.

பாஜகவின் துரோகப் பேச்சு
பாஜகவின் எம்பி இல.கணேசன், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் தமிழிசை ஆகியோர் நாடு வளர்ச்சி அடைய ஒரு மாநிலம் அழிந்தால் பரவாயில்லை என்று கூறுகிறார்கள். இது தமிழக மக்களுக்கு விரோதமான பேச்சு. இதுபோன்ற மக்கள் விரோத கருத்தை நாங்கள் ஏற்க மாட்டோம்.

போராட்டத்திற்கு அரசு ஆதரவு
மாநில அரசு மத்திய அரசை சந்தித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுங்கள் என்று சொல்வது மட்டும் போதாது. நெடுவாசல் மக்கள் நடத்தும் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தினால் அதனை எதிர்க்கவும் தமிழக அரசு தயாராக இருக்க வேண்டும்.

மக்கள் கருத்து முக்கியம்
ஒரு திட்டத்திற்கு அனுமதி கொடுப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும். ஆனால் மத்திய அரசு அப்படி ஒன்றை நடத்தாமல், மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார். ஆகவே, மக்கள் கருத்தை அறியாத, மக்களுக்கு விரோதமான இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

பாழாகும் சந்ததி
இதுகுறித்து திருமாவளவன் கூறிய போது, "இது எதிர்கால சந்ததியினருக்கு எதிரான துரோகம் என்பதை உணர வேண்டும். தேசம் வளர்ச்சி அடைய பல செயல்பாடுகள் இருக்கின்றன. நெடுவாசலில் நெடுங்காலத்திற்கு வாழ முடியாத பாலைவனமாக மாறும் என்ற அச்சத்தை இந்த ஹைட்ரோ கார்பன் திட்டம் ஏற்படுத்தியுள்ளது. எனவே, முழுமையாக இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications