ஒரு ஜில் நியூஸ்... வெப்பச்சலனம் காரணமாக இன்று மழை பெய்ய வாய்ப்பு!
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தாண்டு பிப்ரவரி மாதம் முதலே வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. நாளுக்கு நாள் கோடையின் தாக்கம் அதிகரித்து வருவ்தால், வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சி மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

கடலோர மாவட்டங்களை தவிர்த்து, உள் மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவுகிறது. அப்பகுதிகளில், 103 முதல் 107 டிகிரி,'பாரன்ஹீட்' வெப்பம் வரை பதிவாகி வருகிறது.
இந்நிலையில், கிழக்கில் இருந்து ஈரப்பதம் உள்ள காற்று வீசுவதால் இம்மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. சேலம், தர்மபுரி, திருச்சி, வேலுார் நகரங்களில், அதிகபட்சமாக நேற்று, 104 டிகிரி, 'பாரன்ஹீட்' வெப்பம் பதிவானது. இது கடலோர மாவட்டங்களில், 95 - 99 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது.
இந்த சூழ்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘இதன் பின், இம்மாதம் 21ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் வானம் சற்று மேக மூட்டத்துடன் இருக்கும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நெல்லை மாவட்டம் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான புளியரை, பன்பொழி ஆகிய பகுதிகளில் நேற்று கோடை மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications