டெல்டா மாவட்டங்களில் தொடரும் கன மழை: பெண் பலி - மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு
தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து பெண் ஒருவர் பலியான சம்பவம் கும்பகோணம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று 3வது நாளாக மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் வல்லம், குருங்குளம், திருவையாறு, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, கல்லணை, ஒரத்தநாடு, நெய்வாசல் தென்பாதி, வெட்டிக்காடு, குருங்குளம், பாபநாசம், அய்யம்பேட்டை, திருவிடைமருதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கும்பகோணத்தில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த மலர்கொடி என்ற பெண் ஒருவர் உயிரிழந்தார்.

நாகை மாவட்டத்தில் பூம்புகார், வாணகிரி, கீழமூவர்க்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நாகை மற்றும் பூம்புகாரில் கடல்சீற்றத்துடன் காணப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், லெட்சுமாங்குடி, பூதமங்கலம், பொதக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீரின் அளவு இரண்டாயிரத்தில் இருந்து ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் நீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 61 புள்ளி 46 அடியாகவும், நீர் இருப்பு 25 புள்ளி 78 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 3ஆயிரத்து 415 லிருந்து 4ஆயிரத்து 259 கன அடியாக உயர்ந்துள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய்கள் மூலம் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது 2ஆவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கி முதியவர் சாவு
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு பிறகு நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது. அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது. அருமனை அருகே தொட்டிகோட்டு கோணம் பகுதியை சேர்ந்த மதுசூதனன், 67 என்பவர் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் உள்ள தரைப்பாலத்தை கடந்து பஸ் நிறுத்தத்திற்கு செல்ல முயன்றார். தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி சென்ற வெள்ளம் மதுசூதனனை இழுத்துச் சென்றது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் மழையினால் 25 வீடுகள் இடிந்து விழுந்தன.
இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications