தொடர்மழை: சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை
சென்னை: தொடர்மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுகிறது என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளனர்
திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளம் வடியாமல் இருப்பதால் பாதுகாப்பு கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

அதேபோல சென்னை மாவட்டத்திலும் மழையால் தேங்கியுள்ள வெள்ளநீர் வடியாமல் இருப்பதாலும், பெரும்பாலான பள்ளிகள் முகாம்களாக செயல்படுவதாலும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளத்தினால் தூத்துக்குடி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் அறிவித்துள்ளார்.
சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தாலும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கடந்த 10 நாட்கள் தொடர் விடுமுறையாக கிடைத்துள்ளது. இதனை மாணவர்கள் நன்றாக கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 9ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு முதல்நாள் தொடங்கி மழை விடுமுறை விடப்பட்டு வருகிறது. 10, 11 தீபாவளி பண்டிகைக்காக விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து கடந்த 12ம் தேதி கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், ஏரிகள் நிரம்பி வழிந்து வெள்ளம் ஓடுவதாலும் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டு வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் தவிர மழைக்காக மட்டும் நாளை 11 வது நாளாக தொடர்ந்து விடுமுறை விடப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ விடுமுறை 11 வது நாள் என்றாலும், தீபாவளி பண்டிகைக்கு முந்தைய சனிக்கிழமையான 7ம் தேதிக்கு பின்னர் பள்ளிகள் எதுவும் திறக்கப்படவில்லை. இதன்படி பார்த்தால் தொடர்ந்து 18 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறையாகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 17 நாட்களாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர் வடியாத காரணத்தால் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர்களுக்காக தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக விடுமுறை வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும். அரையாண்டுத்தேர்வு நெருங்கும் நிலையில் தொடர் விடுமுறை விடப்படுவதால் ஆசிரியர்களும், பெற்றோர்களும் கவலையடைந்துள்ளனர். சென்னை பல்கலைக்கழகமும், அண்ணாபல்கலைக்கழகமும் தொடர்ந்து தேர்வுகளை கடந்த ஒரு வாரமாக ஒத்திவைத்து வருகிறது.
இதற்கு முன்னர் 2004ம் ஆண்டு சுனாமி தாக்குதல் ஏற்பட்டபோதும், 2005ம் ஆண்டு புயல் மழை காரணமாகவும் தொடர்ந்து 4 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது. அதனை தொடர்ந்து 2008ம் ஆண்டு 3 நாட்களும், 2010ம் ஆண்டு 2 நாட்களும் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டது. இந்த ஆண்டுதான் மழை, வெள்ளத்திற்காக தொடர்ந்து மூன்றாவது வாரமாக விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications