வெப்பச்சலனம் காரணமாக... தமிழ்நாட்டில் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்!
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் மேலும் 4 நாட்களுக்கு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழை கர்நாடகத்தின் வடக்கு பகுதியிலும், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நேற்று முன்தினம் இரவு கரு மேகங்கள்திரண்டு பலத்த காற்றுடன் மழை பெய்தது. நேற்று இரவும், இன்று காலையும் ஆங்காங்கே மழை பெய்தது.
மழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. கீழ்ப்பாக்கம் கார்டன் லட்சுமி தெருவில் மரம் ஒன்று வேருடன் விழுந்ததில், கார் ஒன்று பலத்த சேதம் அடைந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் சில இடங்களில் மேலும் 4 நாட்களுக்கு பெய்யும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் அவர்கள் கூறுகையில், ‘வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. எங்கெல்லாம் மேகம் திரள்கிறதோஅங்கு எல்லாம் மழை பெய்கிறது. இந்த மழை 14-ந்தேதி வரை (4 நாட்கள்) நீடிக்கும். ஆனால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மட்டும் பெய்யும். தமிழ்நாடு முழுவதும் பெய்யாது' என்று தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
செம்பரம்பாக்கம் 8 செ.மீ., தக்கலை 7 செ.மீ., செய்யாறு, வந்தவாசி, சென்னை நுங்கம்பாக்கம், குளச்சல் தலா 5 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர், மயிலாடி, சமயபுரம், லால்குடி, சென்னை அண்ணாபல்கலைக்கழகம் தலா 4 செ.மீ., சென்னை விமானநிலையம், கொளப்பாக்கம், உத்திரமேரூர், கேளம்பாக்கம்,செஞ்சி, திண்டிவனம், சென்னை டி.ஜி.பி.அலுவலகம், தரமணி, காஞ்சீபுரம், காட்டுக்குப்பம், புள்ளம்பாடி, குழித்துறை, பூதப்பாண்டி, தாம்பரம், நாகர்கோவில் தலா 3 செ.மீ.
காட்டுமன்னார்கோவில், மதுராந்தகம், செங்கல்பட்டு, பாபநாசம், வால்பாறை, கன்னியாகுமரி தலா 2 செ.மீ.












Click it and Unblock the Notifications