ரஜினிகாந்த் பிரஸ் மீட்டில் சொன்ன பரபரப்பு கருத்து.. திமுகவிடம் இருந்து வந்த முதல் ரியாக்ஷன்
சென்னை: திமுக - அதிமுக கூட்டணி அமைத்து விஜய் முதல்வராவதை தடுக்க முயன்றதாக பரவிய வதந்திகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக விளக்கம் அளித்துள்ளார். "அப்படிப்பட்ட தரங்கெட்ட அரசியல் செய்யும் ஆள் நான் கிடையாது" என திட்டவட்டமாக மறுத்த ரஜினிகாந்த், ஸ்டாலினை நீண்டநாள் நட்பின் காரணமாக மட்டுமே சந்தித்ததாக கூறினார். இதையடுத்து, ரஜினியின் பெயர் தேவையற்ற முறையில் அரசியல் விவாதங்களில் இழுக்கப்பட்டதாக திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்த 3 ஆண்டுகளுக்குள் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுள்ளார். வரலாற்று சாதனை படைத்த விஜய்க்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். 108 இடங்களில் வென்ற தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், விசிக போன்ற கட்சிகளின் ஆதரவு அளித்தன.

அதே சமயம் திமுக, அதிமுக கடும் தோல்வியை சந்தித்தன. தேர்தலில் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி பெற்ற நிலையில் அவரை ரஜினிகாந்த் சந்தித்து பேசியிருந்தார். இந்த நிலையில் விஜய் முதல்வராவதைத் தடுக்க, அதிமுகவும் திமுகவும் கூட்டணி அமைத்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க ரஜினிகாந்த், ஸ்டாலினிடம் பேசியதாகப் பலதரப்பட்ட வதந்திகள் வேகமாகப் பரவின.
சமூக வலைத்தளங்களிலும், மக்கள் மத்தியிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், ரஜினிகாந்த் இந்த குற்றச்சாட்டுகளுக்கு இன்று பதில் அளித்தார். அவர் கூறுகையில், "இப்படி பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு தரங்கெட்ட ஆளு இந்த ரஜினி கிடையாது. எனக்கு என்ன பொறாமை?.. தேர்தல் முடிவுகள் வந்ததும் என்னை குறித்து சில விமர்சனங்கள் வந்தன. நான் பதில் தராமல் இருந்தால் அது 100 சதவீதம் உண்மையாகிவிடும்.. தான் அத்தகைய செயல்களில் ஈடுபடும் அளவுக்குத் தரங்கெட்டவர் அல்ல..
கொள்கை, அரசியலுக்கு அப்பாற்பட்டு எங்களது நட்பு 40 ஆண்டுகளுக்கு மேலானது. அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்தான். நட்பு ரீதியில்தான் ஸ்டாலினை நான் சந்தித்தேன்.. வெற்றி மட்டுமல்லாமல், கஷ்டமான காலங்களிலும் உடன் இருப்பேன் என்று ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறினேன். விஜய் முதல்வர் ஆவதில் தனக்கு என்ன பொறாமை.. நான் அரசியலிலும் இல்லை. அவருக்கும் எனக்கு 28 வயது வித்தியாசம். அவர் ஜெயித்ததுமே நான் எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துவிட்டேன்..
ஒருவேளை கமல்ஹாசன் முதலமைச்சராகியிருந்தால் கூட, அவருடன் நடித்துக் கொண்டிருக்கும் படம் நின்றுவிடுமோ என்றே தாம் நினைத்திருப்பேன் தவிர, பொறாமை வந்திருக்காது.. விஜய் தனியாகப் போட்டியிட்டு வென்றுள்ளார். எம்ஜிஆர், என்டிஆரை விட அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளார். இது எனக்கு ஆச்சரியம் கலந்த சந்தோஷம்தான்" என்று ரஜினிகாந்த் கூறினார்.
ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்ததை அடுத்து, திமுக-அதிமுக கூட்டணி விவாதங்களில் நடிகர் ரஜினியின் பெயரை தேவையற்ற முறையில் இணைத்தது குறித்து திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கருத்து கூறியுள்ளார். அவர் பேசுகையில், "சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றிப் பரவும் வதந்திகளுக்கு விளக்கமளிக்க சென்னை போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார்..
ரஜினி உண்மையான நிலவரத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் எங்கள் கட்சித் தலைவரை தனிப்பட்ட நட்பின் காரணமாகச் சந்தித்தார். முதல்வர் விஜய்க்கும் வாழ்த்து தெரிவித்தார். இந்தச் செய்தி ஊடகங்களிலும் வெளியானது. அவர் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். சிலர் இதைத் திரித்துக் கூறுகிறார்கள். ஆனால், அவரது பதிலானது நிலைமையைச் சரிசெய்யும். திமுக - அதிமுக கூட்டணி தொடர்பான பேச்சில் அவரது பெயர் தேவையற்ற முறையில் தொடர்புபடுத்தப்பட்டது" எனத் தெரிவித்தார்.














Click it and Unblock the Notifications