ஜெ. குறித்து சர்ச்சை கருத்தைக் கூறி கைதான ராமசீதா.. ஜாமீன் கோரி மனு
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதாக கைது செய்யப்பட்ட ராம சீதாவின் ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
ஜெயலலிதா உடல்நிலை கோளாறு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் இறக்கும் தருவாய் வரை அவரது உடல்நிலை குறித்து மர்மமாக இருந்து வந்தது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு ஊகங்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.

மேலும் கடந்த 10 தினங்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராம சீதா, தான் அப்பல்லோ மருத்துவர் என்றும், கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட அழைத்து வரப்பட்டபோதே ஜெயலலிதா இறந்திருந்தார் என்றும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து தகவலறிந்த அப்பல்லோ நிர்வாகம், ராம சீதா தங்களுடைய மருத்துவமனையில் பணியாற்றவில்லை என்று சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தது. புகாரின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்த போலீஸார் இன்று பெரம்பூரில் ஒரு வீட்டில் இருந்த சீதாவை கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் காஞ்சிபுரம் மாவட்டம், செய்யாறை சேர்ந்தவர் என்றும், பி.எஸ்சி. நியூட்ரீசியன் பட்டம் மட்டுமே பயின்றவர் என்று தெரியவந்தது.
இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் சீதா ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவானது நாளை விசாரணைக்கு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications