For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாழ வைக்கும் உழவர்களுக்கு வாழ்வளிக்க வேண்டாமா? ராமதாஸ் வேதனை

வறட்சியால் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த அனைத்து உழவர் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: விவசாயிகள் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வறட்சியின் கொடுமையால் பயிர்கள் கருகியதை தாங்கிக்கொள்ள முடியாமல் நேற்று ஒரே நாளில் 6 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியில் மயங்கி விழுந்தும் உயிரிழந்திருக்கின்றனர். காவிரி பாசன மாவட்டங்களில் உழவர்களின் உயிரிழப்பு தொடர்வது அதிர்ச்சியும், சோகமும் அளிக்கிறது.

Ramadoss demanded to give 25 lakh to the families of farmers

நாகப்பட்டினம் மாவட்டம் இராமர் மடத்தில் பக்கிரிசாமி என்ற விவசாயியும், திருப்புகழூரில் கண்ணன் என்ற விவசாயியும், திருவாரூர் மாவட்டம் வடுகப்பட்டியில் வெங்கடாச்சலம் என்ற உழவரும் பயிர்கள் கருகுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்தப் புதூரில் பவுன்ராஜ் என்ற உழவரும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் பெரியக்கருப்பத்தேவர் என்ற உழவரும் பயிர் கருகியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டனர்.

அதேபோல், அரியலூர் மாவட்டம் சேனாதிபதி கிராமத்தில் ஒரு விவசாயி உயிரிழந்துள்ளார். இவர்களையும் சேர்த்து காவிரி பாசன மாவட்டங்களிலும், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியிலும் உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்திருக்கிறது.

உழவர்களின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகத்திடமிருந்து காவிரியில் தண்ணீர் பெற்று குறுவை மற்றும் சம்பா சாகுபடியை வெற்றிகரமாக செய்து முடிக்க மத்திய, மாநில அரசுகள் உதவி செய்திருந்தால் உழவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; மாறாக மகிழ்ச்சியடைந்து இருப்பார்கள். ஆனால், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து விட்டது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு கர்நாடகத்தை எச்சரித்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கும்படி ஆணையிட்டிருக்க வேண்டும்.

ஆனால், அதை செய்ய மறுத்து விட்ட மத்திய அரசு, கர்நாடகத்திற்கு ஆதரவாக செயல்பட்டது. இதையெல்லாம் செய்வதற்கான அரசியல் அழுத்தம் கொடுக்க தமிழகமும் தவறி விட்டது. இவர்கள் செய்த தவறுகளால் அப்பாவி விவசாயிகள் உயிரிழக்க வேண்டியிருக்கிறது.

பட்ட காலிலேயே படும்... கெட்ட குடியே கெடும் என்பது விவசாயிகளுக்குத் தான் பொருந்தும். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளாக காவிரி பாசன மாவட்டங்களில் காவிரியில் நீர் வராததால் குறுவை சாகுபடி பொய்த்து விட்டது. கடந்த ஆண்டில் வெள்ளத்தில் சிக்கி சம்பா பயிரும் அழிந்து விட்டது. நடப்பாண்டில் குறுவை, சம்பா ஆகிய இரு பருவங்களும் பாதிக்கப்பட்டன. ஒட்டு மொத்தமாக கடந்த 10 பருவங்களில் 7 பருவங்களுக்கு இழப்பை மட்டுமே உழவர்கள் சந்தித்துள்ளனர். மீதமுள்ள 3 பருவங்களில் கூட உழவர்களுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக லாபம் கிடைக்கவில்லை.

கடந்த 5 ஆண்டுகளாக கடன் வாங்கி, கடன் வாங்கி வாழ்க்கையையும், விவசாயத்தையும் நடத்தி வந்த விவசாயிகள், இறுதியாக நம்பியிருந்த சம்பா பயிரும் கருகி விட்டதால் இனி வாழ்வதற்கு வழியே இல்லை என்ற நிலையில் தான் அதிர்ச்சியடைந்தும், தற்கொலை செய்தும் உயிரிழந்துள்ளனர்.

உழவர்கள் தங்கள் துயரத்தை வெளிப்படுத்த பல்வேறு வழிகளில் அறப்போராட்டம் நடத்தினார்கள். உழவர்களின் தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும் அதை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாததன் விளைவாகத் தான் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகியிருக்கிறது. போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்கத்தினருடன் அரசு பேச்சு நடத்திய போதிலும், அதில் உழவர்களுக்கு சாதகமாக உடன்பாடு எட்டப்பட்டதாக தெரியவில்லை.

வறட்சியால் உழவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய அரசு உதவுவதன் மூலம் மட்டுமே தற்கொலைகளையும், அதிர்ச்சி சாவுகளையும் தடுக்க முடியும். உணவளித்து மக்களை வாழவைக்கும் உழவர்களுக்கு வாழ்வு அளிக்க வேண்டியது அரசின் கடமையாகும். எனவே, காவிரி பாசன மாவட்டங்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழகத்தையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, உச்சவரம்பும், நிபந்தனையும் இல்லாமல் அனைத்து உழவர்களின் பயிர்க்கடனையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும், நிலமற்ற தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும். அத்துடன், அதிர்ச்சியிலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்த அனைத்து உழவர் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், அவர்கள் குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
PMK chief Doctor Ramadoss demanded that the government give 25 lakh to the families of farmers, who either committed suicide or died of cardiac arrest
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X