ரயில் கட்டண உயர்வை திரும்ப பெறுக: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: மக்களை பாதிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள பயணிகள் மற்றும் சரக்குக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது:
"டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி பயணிகள் ரயில் கட்டணம் நாளை மறுநாள் முதல் 2 சதவீதம் உயர்த்தப்படும் என்று ரயில்வேத்துறை அறிவித்திருக்கிறது. இது தவிர சரக்குக் கட்டணமும் வரும் 10 ஆம் தேதி முதல் 1.7 சதவீதம் உயர்த்தப்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
பார்சல் கட்டணம், பொருட்கள் சரக்குக் கட்டணம் ஆகியவை கடந்த ஒன்றாம் தேதி 15 சதவீதம் உயர்த்தப்பட்டன. அதற்குள்ளாக பயணிகள் கட்டணமும், சரக்குக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ரயில்வேத்துறைக்கு ஆண்டுக்கு ரூ.4700 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். இது டீசல் விலை உயர்வால் ரயில்வேத்துறைக்கு ஏற்படும் கூடுதல் செலவைவிட அதிகமாகும்.

மோசமான விளைவு
விலைவாசி உயர்வால் நேரடியாகவும், பெட்ரோலியப்பொருட்கள் விலை உயர்வால் மறைமுகமாகவும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சரக்குக்கட்டணம் மற்றும் பொருட்கள் சரக்குக் கட்டண உயர்வால் ஏற்படும் சங்கிலித்தொடர் விளைவுகள் சாதாரண மக்களின் பட்ஜெட்டில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

ஏழைகளை பாதிக்கும்
தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் ரயில் கட்டணத்தைவிட பேருந்துக் கட்டணம் அதிகமாக இருப்பதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்களின் பயணத்திற்காக ரயில்களையே நம்பியிருக்கின்றனர். இந்த நேரத்தில் பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும்.

ராமதாஸ் கண்டனம்
டீசல் விலை உயர்வு காரணமாகத் தான் பயணிகள் கட்டணமும், சரக்குக்கட்டணமும் உயர்த்தப் பட்டதாக மத்திய அரசு கூறுவதை ஏற்கமுடியாது. கடந்த 2004 முதல் 2009 வரை ரயில்வேத்துறை அமைச்சராக லாலுவும், இணை அமைச்சராக பா.ம.க.வை சேர்ந்த வேலுவும் பதவி வகித்தனர். அந்த 5 ஆண்டுகளில் டீசல் விலை மொத்தம் 53 சதவீதம் உயர்த்தப்பட்டது. எனினும், பயணிகள் கட்டணம் ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை. மாறாக அத்துறையின் லாபம் அதிகரித்ததால் பயணிகள் கட்டணம் அடையாளமாக குறைக்கப்பட்டது. ஆனால், கடந்த 6 மாதங்களில் டீசல் விலை 8.5 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில், அதைக் காரணம் காட்டி ரூ.4700 கோடி கட்டண உயர்வு சுமையை மக்கள் தலையில் சுமத்தியிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

கட்டண உயர்வை திரும்ப பெறுக
ரயில்வேத்துறைக்கு இழப்பு ஏற்படுவதற்கு காரணம் அதன் நிர்வாகத் திறமையின்மையே தவிர, எரிபொருள் விலை உயர்வு அல்ல. டீசல் விலை உயர்வால் சுமை ஏற்பட்டிருப்பது உணமை தான். அதை நிர்வாகத் திறமையின் மூலம் சமாளிக்க வேண்டுமே தவிர கட்டண உயர்வு என்ற சுமையை மக்கள் தலையில் சுமத்தி சமாளிக்க முயலக்கூடாது. எனவே, மக்களை பாதிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள பயணிகள் மற்றும் சரக்குக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications