ஒரு ஊருக்குக் கூட சசி குரூப் எம்.எல்.ஏக்களால் நிம்மதியாகப் போக முடியவில்லை.. ராமராஜன்
விழுப்புரம்: சசிகலா குரூப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களால் எங்குமே நிம்மதியாகப் போக முடியவில்லை. அந்த அளவுக்கு மக்கள் எதிர்ப்பு உள்ளது என்று நடிகர் ராமராஜன் கூறியுள்ளார்.
விழுப்புரம் பழைய பஸ் நிலையப் பகுதியில் ஓ.பி.எஸ். அதிமுக சார்பில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் ராமராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நடிகர் ராமராஜன் பேசும்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ராமராஜன் பேச்சிலிருந்து:

பல குழப்பங்கள்
ஜெயலலிதாவின் மரணத்தில் பல குழப்பங்கள் இருந்து வருகிறது. அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது அவருடைய முகத்தை கூட காண்பிக்காததால் மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. எனவே ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மம் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென மக்கள் ஆதரவோடு இந்த போராட்டம் நடந்தது.

விரும்பாத கூட்டம்
பதவி வேண்டும், பணம் வேண்டும் என விரும்பாத கூட்டம் இங்கு வந்துள்ளது. மக்களுக்காக வாழ்ந்தவர் ஜெயலலிதா. அதனால்தான் இந்த போராட்டத்தில் மக்கள் அதிகளவில் பங்கேற்றுள்ளனர்.

ஓ.பி.எஸ்.ஸை ஒருமுறை கூட மாற்றவில்லை
ஜெயலலிதாவினால் முதல்வராக அங்கீகரிக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். பல அமைச்சர்களை ஜெயலலிதா மாற்றியுள்ளார். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை மட்டும் ஒருமுறை கூட மாற்றவில்லை. அந்தளவிற்கு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக நடந்துள்ளார்.

உள்ளே வரக் கூடாது
முன்பெல்லாம் நிறைய சினிமா நடிகர்களின் விளம்பர பதாகைகள்தான் இருக்கும். தற்போது எம்.எல்.ஏ.க்கள் ஊருக்குள் வரக்கூடாது என்ற விளம்பர பதாகைகள்தான் அதிகளவில் உள்ளது. எங்கு சென்றாலும் போலீஸ் பாதுகாப்புடன்தான் எம்.எல்.ஏ.க்கள் செல்லும் நிலைமை உள்ளது.

மாறி மாறி குழப்புகின்றனர்
இந்த போராட்டம் அறிவித்தவுடன் மருத்துவ அறிக்கைகளை முரணாக வெளியிட்டு மாற்றி, மாற்றி குழப்புகின்றனர். ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மங்களை கண்டுபிடிக்க உடனடியாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார் ராமராஜன்.












Click it and Unblock the Notifications