ராணிப்பேட்டை முதியவருடன் தாய்க்கு உறவா? 70 வயது நபரைக் கொன்று பைக்கில் சடலத்தை எடுத்து சென்ற இளைஞர்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே 70 வயது முதியவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் கொலை சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. அதுவும் தீபாவளி தினத்தில் ஒரே நாளில் 13 கொலைகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், ஆளுநரிடம் தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் அரக்கோணத்தில் நடந்த இந்தக் கொலையின் பின்னணி என்ன? 70 வயது முதியவரைக் கொலை செய்யும் அளவுக்கு நடந்தது என்ன?
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே கீழ்வீதி கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுமார் (70). கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சுகுமார் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் அவரை வழிமறித்துள்ளது. கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சுகுமாரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.. அப்போதுதான், இந்த கொடூரமான கொலைக்குப் பின்னால், கள்ளக்காதல் விவகாரம் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, சுகுமார், அதே பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவனின் தாயுடன் தகாத உறவில் இருந்து வந்தாராம்.. இந்த விஷயம் தெரிந்து, சுகுமாரை கண்டித்துள்ளார் அந்த 18 வயது மகன்..
ஆனால், சுகுமார் தன்னுடைய கள்ள உறவை கைவிட போவதில்லை என்று கறாராக சொன்னாராம்.. இதனால் ஆத்திரமடைந்த 18 வயது சிறுவன், தனது நண்பருடன் சேர்ந்து சுகுமாரை குத்தியே கொன்று விட்டாராம்.
கொலைக்குப் பின்னணி என்ன?
சுகுமாரை கொலை செய்ததுமே, அவரது சடலத்தை மறைக்க நண்பர்கள் 2 பேரும் திட்டமிட்டுள்ளனர்.. அதன்படி, சுகுமாரின் உடலை பைக்கில் உட்கார வைத்துக்கொண்டு புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு யாரோ அவரை வெட்டிவிட்டதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு வந்ததாகவும் டாக்டர்களிடம் சொல்லி உள்ளனர்..
ஆனால், சுகுமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்... உடனே நண்பர்கள் 2 பேரும் அங்கிருந்து எகிறி தப்பி ஓடிவிட்டார்களாம். இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, 18 வயது சிறுவன் கவின்குமார், அவரது நண்பர் நித்தீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்..
அதுமட்டுமல்லாமல், இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 18 வயது சிறுவன் இப்படியொரு கொலையை செய்தது, ராணிப்பேட்டையை பதற வைத்து வருகிறது..
சட்டம் ஒழுங்கு எப்படி?
தமிழகத்தில் அண்மைக்காலமாக நடக்கும் கொலைச் சம்பவங்கள் அரசியல் ரீதியாகவும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. தீபாவளி நாளில் தமிழகத்தில் 13 கொலைகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், அந்த நாளில் 8 கொலைகள் மட்டுமே நடந்ததாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இந்த எண்ணிக்கை தொடர்பாகவே அரசியல் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தேனியில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவமும் இந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியது. இதையடுத்து தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து அறிக்கை அளிக்க ஆளுநர் ராஜேந்திர அர்லேகரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
மக்களின் பாதுகாப்பு யார் பொறுப்பு?
ஒரு கொலை நடந்த பிறகு குற்றவாளிகளை கைது செய்வது முக்கியம்தான்.. ஆனால் அதே நேரத்தில், இதுபோன்ற கொலைகள் நடக்காமல் தடுப்பதும் அதைவிட அவசியம். குடும்ப பிரச்சனையாக இருந்தாலும், முன்விரோதமாக இருந்தாலும், ஒரு உயிரைப் பறிக்கும் அளவுக்கு பிரச்சனை செல்வதைத் தடுக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதம் வலுத்துள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்பதே இப்போது எழும் முக்கியக் கேள்வி...!!!


Click it and Unblock the Notifications
