ராணிப்பேட்டை குண்டு வீச்சு சம்பவத்துக்கு என்ன காரணம்? இளைஞர் சுட்டுப்பிடிப்பு.. போலீஸ் விளக்கம்!
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய ஹரி என்ற இளைஞரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த நிலையில், அந்த நபர் குண்டு வீசியது ஏன் என விசாரணையில் தெரிவித்தது பற்றி மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
தனது தந்தை மீதும், தன் மீதும், தனது கூட்டாளிகளின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு பழி வாங்கும் நோக்கத்தில், ஹரி என்ற இளைஞர் இந்தக் குற்ற செயலில் ஈடுப்பட்டுள்ளார் என ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி காவல் நிலையம் உள்ளது. நேற்று நள்ளிரவு முகமூடி அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள், காவல் நிலையத்தின் நுழைவு வாயிலில் உள்ள வரவேற்பாளர் மற்றும் பொதுமக்கள் அமரும் இடத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசினர். பெட்ரோல் குண்டுகள் வெடித்து கரும்புகை சூழ்ந்தது.
அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார், உடனடியாக தண்ணீரை ஊற்றி தீ பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பொருட்களுக்கோ, ஆட்களுக்கோ எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
இதேபோல் போலீஸ் ஸ்டேஷன் எதிரே பஜார் வீதியில் உள்ள அரிசிக்கடை மீதும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த எஸ்பி விவேகானந்த சுக்லா சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தார். மேலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைத்தும் உத்தரவிட்டார்.
சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வந்தனர். மேலும் 2 தனிப்படை போலீசார் சிப்காட் காவல் நிலையம் மற்றும் அரிசி கடை மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக தனித்தனியே விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து திங்கட்கிழமை மாலை, குண்டு வீசிய நபர் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் குண்டு வீசிய ஹரி என்பவரை பிடிக்க சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரன் சென்றுள்ளார். அப்போது போலீசார் பிடிக்க முயன்றபோது சிப்காட் உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரனை கத்தியால் தாக்க ஹரி முயற்சி செய்துள்ளார்.

வேறுவழியின்றி உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரன் தற்காப்புக்காக ஹரியின் கால் முட்டிக்கு கீழே துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த ஹரிக்கு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஹரி தாக்கியதில் காயமடைந்த எஸ்.ஐ. முத்தீஸ்வரனும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "02.02.2025 ஆம் தேதி இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டில் அமைந்துள்ள ஒரு அரிசி மண்டி மற்றும் சிப்காட் காவல் நிலைய வளாகம் ஆகிய இடங்களில் பெட்ரோல் நிரப்பபப்பட்ட பேப்பர் திரியுடன் கொண்ட பாட்டில்களை மர்ம நபர்கள் இரவு சுமார் 11 மணியளவில் வீசி சென்றுள்ளனர். இது சம்மந்தமாக அரிசி மண்டி உரிமையாளர் மற்றும் சிப்காட் காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர் கொடுத்த புகாரின் பேரில் இரண்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யவேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடிவந்த நிலையில், மேற்படி வழக்குகளில் தொடர்புடைய முக்கிய நபர் இன்று (03.02.2025) கையகப்படுத்தப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற் கட்ட விசாரணையில் தனது தந்தை மீதும், தன் மீதும், தனது கூட்டாளிகளின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு பழி வாங்கும் நோக்கத்தில் இந்த குற்ற செயலில் ஈடுப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இவ்வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications