யாராவது உள்ளே இருக்கீங்களா...? கட்டிட இடிபாடுகளுக்குள் 3 மொழிகளில் குரல் எழுப்பும் மீட்பு குழுவினர்!
சென்னை: கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை உயிருடன் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினர், இடிபாடுகளுக்கிடையே மூன்று மொழிகளில் குரல் எழுப்பி வருகின்றனர்.
கடந்த சனியன்று மாலை சென்னையில் இடியுடன் கூடிய திடீர் மழை பெய்தது. இதில், போரூர் மவுலிவாக்கம் பகுதியில் உள்ள 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில், அக்கட்டிடத்தின் அடித்தளத்தில் தங்கியிருந்த கட்டிட ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர்.

இதுவரை இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முழுமையாக மீட்புப் பணிகள் முடிவடையாததால் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மீட்புப் பணி தொடர்ந்து 4-வது நாளாக நடந்து வரும் நிலையில் உயிரோடு இருக்கும் தொழிலாளர்களை மீட்க சாதுர்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, கட்டிட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை கண்டுபிடிக்க நவீன கேமராவை துளை வழியே செலுத்தி மீட்பு குழுவினர் சோதனை செய்து வருகின்றனர்.
மேலும், சிக்கி உள்ளவர்களில் பெரும்பாலானோர் ஆந்திரா, ஒடிசா மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். எனவே, அவர்கள் இடிபாடுகளுக்கு உள்ளே உயிருடன் இருப்பதை அறிய துளை வழியே மீட்பு குழுவினர் இந்தி, தெலுங்கு, தமிழ், ஆகிய மொழிகளில் குரல் எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications