வர்தா புயல்… தயார் நிலையில் மீட்புக் குழுவினர்.. அமைச்சர் தகவல்
வர்தா புயல் நாளை சென்னைக்கு அருகே கரையை கடக்க உள்ளதால், பாதிப்புகளை எதிர் கொள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
சென்னை: வர்தா புயலால் கனமழை பெய்து பாதிப்புகள் ஏற்பட்டால் அதனை எதிர் கொள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர் என்று வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை எழிலகத்தில் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததையடுத்து, 32 வருவாய் மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வர்தா புயல் சென்னை அருகே கரையை கடக்க உள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பலத்த காற்று வீசும் போது மின்சாரம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். அது குறித்து, வருவாய் துறையும், மின்வாரியமும் இணைந்து செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் இப்போதே தண்ணீர் ஏற்றி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடலுக்கு சென்றுள்ள மீனவர்களை மீட்க கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் தொடர்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்ட நிர்வாகங்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மேடான பகுதிகளுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில், பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றன.
தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மீட்க, இந்த 3 மாவட்டங்களுக்கும் மீட்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். வர்தா புயலை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.












Click it and Unblock the Notifications