ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை.. முதலமைச்சர் கணக்குக்கே திரும்பி போன விசித்திரம் - நடந்தது என்ன?
தென்காசி: பெண்களின் வங்கிக் கணக்கில் விழுந்த ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை மீண்டும் முதலமைச்சரின் கணக்கிற்கு சென்றது என்றால் நம்ப முடிகிறதா? எப்படி என்று விரிவாக பார்ப்போம்.
கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று தமிழ்நாடு அரசின் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு இதனை பெற தகுதி உள்ள பெண்கள் யார், தகுதி இல்லாதவர்கள் யார் என்ற பட்டியலை அறிவித்தது. அதன்படி கடந்த ஜூலை மாதம் இதற்கான முகாம் தொடங்கப்பட்டது. அதில் மக்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு ஆகஸ்டு 4 ஆம் தேதி முதல் கட்ட முகாம் நிறைவு பெற்றது. அதன் மூலம் 80 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

2 ஆம் கட்ட முகாம் ஆகஸ்டு 5 ஆம் தேதி தொடங்கப்பட்டு ஆகஸ்டு 18 ஆம் தேதி வரை நடைபெற்றது. 2 ஆம் கட்ட முகாமில் விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் ஆகஸ்டு 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை சிறப்பு முகாமை தமிழ்நாடு அரசு நடத்தியது. அதன் மூலமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும் திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு 18.09.2023 முதல் அனுப்பி வைக்கப்பட்டது.
ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு, "குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும். வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள், அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும்.
வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய கள ஆய்வு தேவைப்படும் நேர்வுகளில், சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள் வழி கள ஆய்வு அறிக்கையினைப் பெற்று விசாரணை செய்வார். இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யப்படும். வருவாய் கோட்டாட்சியர் பயனாளிகளின் தகுதி மற்றும் தகுதியின்மைகள் தொடர்பாக தனி நபர்களின் மூலம் வரப்பெறும் புகார்கள் குறித்த விசாரணை அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் வழியாகப் பெறப்படும் புகார்கள் மேல் முறையீட்டு மனுக்களுக்கு பின்பற்றப்படும் நடைமுறைகளைப் பின்பற்றி விசாரிக்கப்படும்." என்று குறிப்பிடப்பட்டது.
ஒரு பக்கம் தங்களுக்கு பணம் கிடைக்கவில்லை என பெண்கள் இ சேவை மையங்களுக்கு அலைந்துகொண்டு இருக்க, தங்களுக்கு கிடைத்த பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கே 30 பெண்கள் செலுத்தி உள்ளனர். தென்காசியில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பொதுமக்கள், அங்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மனு அளித்து உள்ளனர். இந்த மனு பெறப்பட்ட 24 மணி நேரத்தில் பணம் கிடைத்து உள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 30 பெண்கள் ரூ.15 ஆயிரத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications