திருவண்ணாமலை: ரூ.300 பணம் மாயம்… மாணவர்கள் கையில் சூடம் ஏற்றிய விடுதி ஊழியர் சஸ்பெண்ட்
திருவண்ணாமலை: விடுதியில் காணமல் போன 300 ரூபாயை கண்டுபிடிக்க 8 மாணவர்களின் கையில் விடுதி ஊழியர் சூடம் ஏற்றி சத்தியம் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை செய்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் விடுதி ஊழியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் விடுதியும் உள்ளது. கடந்த 25ம் தேதி இந்த விடுதியில் தங்கிப்படித்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் ஊருக்கு சென்று விட்டனர். இதனால் விடுதியில் 15க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே தங்கியிருந்தனர். அவர்களில் சிலர் பள்ளி மைதானத்திற்கு விளையாட சென்று இருந்தனர். அப்போது ஒரு மாணவர் வைத்திருந்த 300 ரூபாய் பணம் காணாமல் போய் விட்டது.

இது குறித்து விடுதி பணியாளர் முருகனிடம் மாணவர்கள் தகவல் தெரிவித்தனர். உடனே முருகன் அது குறித்து மற்ற மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டார், ஆனால் யாரும் பணத்தை எடுக்கவில்லை என்று கூறி விட்டனர். ஆனாலும் சந்தேகம் தீராத முருகன், 8 மாணவர்கள் கையிலும் சூடத்தை ஏற்றியுள்ளார். இதில் யாருடைய கையில் புண்ணாகிவிடுகிறதோ அவர்கள்தான் பணத்தை எடுத்திருப்பார்கள் என்று கூறினார். ஆனால் 8 மாணவர்களின் கைகளிலும் சூடு வைத்த இடத்தில் புண்ணாகி விட்டது.
இதைப்பார்த்த விடுதி ஊழியர் இது குறித்து யாரும் தங்கள் பெற்றோரிடம் சொல்லக்கூடாது என்றும், கேட்டால் வேறு ஏதாவது காரணம் கூறுமாறும் தெரிவித்துள்ளார். ஆனால் மாணவர்கள் இதுபற்றி தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் 9ம் வகுப்பு மாணவர் பாரத், 10ம் வகுப்பு மாணவர் நவீன் ஆகிய இருவரும் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு ஆட்சியர் அ.ஞானசேகரனிடம் அவர்கள் தங்கள் கையில் கையில் விடுதி ஊழியர் சூடுவைத்தது குறித்து புகார் செய்தனர்.
மாணவர்களின் கைகளை பார்த்த ஆட்சியர் ஞானசேகரன் அதிர்ச்சியடைந்தார். இந்த பிரச்சினையில் விடுதி ஊழியர் முருகனை பணியிடைநீக்கம் செய்தும், விடுதி காப்பாளர் குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் விடுதி ஊழியர் முருகன் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications