
பட்டப்பகலில் 40 லட்சம் கொள்ளை.. வருமானவரி அதிகாரிகள் போல் ஜீப்பில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை
அரியலூர்: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை நெடுஞ்சாலையில் வைத்து புதிய ரூபாய் நோட்டுக்களாக மாற்றிக் கொண்டிருந்த போது, வருமானவரி அதிகாரிகள் போல் ஜீப்பில் வந்த மர்ம நபர்கள் 40 லட்சம் ரூபாய் பணத்தை வழிபறி செய்துள்ளார். இவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியலூரைச் சேர்ந்த இருவர் தங்களிடம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக அரியலூர் புறவழிச்சாலையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொண்டு புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை கொடுப்பதற்காக கும்பகோணத்தில் இருந்து 2 பேர் அரியலூர் புறவழிச்சாலையில் அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது, 4 பேரும், பழைய ரூபாய் நோட்டைக் கொடுத்துவிட்டு புதிய நோட்டுக்களை மாற்றும் வேலையில் இருந்த போது, அந்தப் பக்கமாக ஜீப்பில் சில மர்ம நபர்கள் வந்துள்ளனர். இவர்கள் பணத்தை சரிப்பார்த்துக் கொண்டிருந்த போது அங்கு ஜீப்பை நிறுத்திய மர்ம நபர்கள், அவர்களிடம் தாங்கள் வரிமானவரித் துறையில் இருந்து வருவதாகக் கூறி 40 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
40 லட்சம் ரூபாய் அபேஸ் செய்த மர்ம நபர்கள், அங்கிருந்து ஜீப்பில் எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர்தான், ஜீப்பில் வந்த நபர்கள் வருமானவரித் துறை அதிகாரிகள் இல்லை என்பதை 4 பேரும் உணர்ந்தனர்.
இதனையடுத்து, போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. நெடுஞ்சாலையில் 40 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த மர்ம நபர்களைப் பிடிக்க போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.