அவர் என் புருஷன்! நீ எப்படி கல்யாணம் செய்யலாம்? மணமகளுக்கு போட்டோ அனுப்பிய திருநங்கை! மணமகன் தற்கொலை
சேலம்: அவர் என் கணவர் என மணமகளுக்கு திருநங்கை ஒருவர் போட்டோ அனுப்பிய விவகாரத்தில் திருமணம் நின்று போனதால் மனமுடைந்த மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சங்ககிரி அருகேயுள்ள ஐவேலி ஊராட்சி ஸ்ரீவாணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (27). இவர் எலக்ட்ரீஷியன். இவருக்கும் சேலம் ஏத்தாப்பூர் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அவர்களுக்கு மே 25 ஆம் தேதி திருமணம் செய்ய பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் விக்னேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணத்திற்கு இன்னும் 2 நாட்கள் இருக்கும் நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சங்ககிரி போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்து விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது விசாரணையில் பல திடுக் தகவல்கள் கிடைத்தன.
சங்ககிரி குப்தா காலனியில் புதிதாக கட்டப்பட்டு வந்த வீட்டிற்கு எலக்ட்ரீஷியன் வேலை பார்க்க விக்னேஷ் சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டின் உரிமையாளர் அஸ்மாவுடன் விக்னேஷுக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. அஸ்மா ஒரு திருநங்கை. இந்த நிலையில் தன்னுடன் பழகிவிட்டு தற்போது வேறு ஒரு பெண்ணை விக்னேஷ் மணக்கவிருக்கிறார் என்ற விஷயம் அஸ்மாவுக்கு தெரிந்தது.
இதுகுறித்து விக்னேஷிடம் அஸ்மா முறையிட்டுள்ளார். ஆனால் விக்னேஷ் அஸ்மாவுக்கு சரியான பதிலை தரவில்லை. இந்த நிலையில் விக்னேஷின் செல்போனில் இருந்து அவர் திருமணம் செய்து கொள்ள போகும் பிரியதர்ஷினியின் நம்பரை எடுத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணின் எண்ணிற்கு விக்னேஷுடன் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை அனுப்பி, இவர் என் கணவர், நீ எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என மிரட்டி மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினி இந்த விஷயத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார். அது போல் அவருடைய பெற்றோர்கள் இந்த விவகாரம் குறித்து விக்னேஷின் பெற்றோரிடம் கேட்டுள்ளனர். இதையடுத்து இந்த திருமணத்தை நிறுத்துமாறு அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து அஸ்மா திடீரென தனது தோழியுடன் விக்னேஷின் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார்.
விக்னேஷின் தாயை அத்தை என்றும் அவரது தந்தையை மாமா என உறவு முறை வைத்தும் அழைத்ததாக தெரிகிறது. அந்த நேரம் பார்த்து விக்னேஷ் வீட்டில் இல்லை. அவர் வந்தவுடன் பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டதையும் அஸ்மா வீட்டுக்கு வந்து தகராறு செய்ததையும் விக்னேஷிடம் கூறினர். இதெல்லாம் தேவையா என அவரை கண்டித்தனர்.
இந்த நிலையில் மனமுடைந்த விக்னேஷ் தனது தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு காவல் துறையின் விசாரணையில் தெரியவந்தது. திருமணம் நடைபெற இருந்த 3 நாட்களுக்கு முன்பு திருநங்கையுடனான உறவு வீட்டுக்கு தெரிந்து திருமணம் நின்றுவிட்டதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications