செல்ல நாய்க்கு நினைவஞ்சலி... ‘காணாமல் ஏங்கும் அன்பு ஜீவன்கள்’ பிரியாமணி, ஜான், முனி, கோம்பேயன்!
சேலம்: சேலம் பகுதியில் வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட நாயொன்றுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது.
சேலம் மாவட்டம் மல்லூர் சுனை கரடு ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த பழனிசாமி, தனது வீட்டில் செல்ல பிராணிகளான நாய், ஆடு ஆகியவற்றை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், கடந்தாண்டு இவர் செல்லமாக வளர்த்த நாய் ஒன்று உயிரிழந்தது. அதனை நினைவு கூறும் வகையில், அந்த நாய்க்கான முதலாம் ஆண்டு நினைவஞ்சலி போஸ்டரை மல்லூர் நகரம் முழுவதும் ஒட்டியுள்ளார் பழனிச்சாமி.
அதுமட்டும் இல்லாமல் மல்லூர் தபால் நிலையம் மற்றும் வீரபாண்டி ரோடு பிரிவு ஆகிய இடங்களில் பெரிய அளவில் பிளக்ஸ் போர்டுகளையும் இறந்த நாயின் படத்துடன் வைத்துள்ளார். அதில் நாயின் பிறந்த தேதி மற்றும் இறந்த தேதியையும் பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாய்க்கு அஞ்சலி செலுத்தும்விதமாக அப்போஸ்டர் மற்றும் பேனர்களில் மற்ற நாயின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது 'உன்னை காணாமல் ஏங்கும் அன்பு ஜீவன்கள்' பிரியமணி, ஜானி, கோம்பேயன், வரிகுதிரை, ரோசி, முனி (ஆடு) என தான் வளர்க்கும் மற்ற செல்லபிராணிகளின் பெயர்களை கூறியுள்ளார்.
மல்லூர் பகுதி முழுவதும் இவ்வாறு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களையும், பிளக்ஸ் போர்டினையும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.


Click it and Unblock the Notifications
