நயினார் நாகேந்திரன் தோல்வி.. சாத்தூர் தொகுதியில் திமுக வெற்றி.. தவெகவிற்கு 3ம் இடம்.. ரிசல்ட் முழு விவரம்
விருதுநகர்: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் சாத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட நிலையில் இன்று தோல்வியை தழுவினார். திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் அமோக வெற்றி பெற்றுள்ளார். தவெக வேட்பாளர் 3ம் இடம் பிடித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன், கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திருநெல்வேலியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுகவிற்காக திருநெல்வேலி தொகுதியை அவர் விட்டு கொடுத்ததோடு, பாஜக தலைவராக இருக்கும் அவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார்.

இந்த தொகுதியில் திமுக சார்பில் கடற்கரை ராஜ் களமிறங்கினார். நாம் தமிழர் சார்பில் ஆனந்த ராஜ் என்பவரும், தவெகவில் அஜித் என்பவரும் போட்டியிட்டனர். இதுதவிர நயினார் நாகேந்திரனை அரசியலில் வளர்த்துவிட்ட சசிகலா தற்போது அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தினார். சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பிஎம்டியின் இசக்கி ராஜா களமிறங்கினார்.
விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை
கடந்த மாதம் 23ம் தேதி நடந்த தேர்தலில் சாத்தூர் தொகுதியில் மொத்தம் 85.65 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இதில் 93,451 ஆண்கள் வாக்களித்தனர். 1 லட்சத்து 2 ஆயிரத்து 933 பெண்களும், 47 மூன்றாம் பாலினத்தவர்களும் வாக்களித்து இருந்தனர். மொத்தம் 1 லட்சத்து 96 ஆயிரத்து 431 ஓட்டுகள் பதிவாகின.
இந்த ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பின்னடைவை சந்தித்தார். திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் முன்னிலையில் இருந்தார். காலை 9.30 மணி நிலவரப்படி திமுகவின் கடற்கரை ராஜ் 3,305 வாக்குகள் வாங்கி முன்னிலை வகித்தார். அதன்பிறகு பல சுற்றுகளில் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் பின்னடைவை சந்தித்த நிலையில் பிறகு முன்னிலை வகித்தார்.
பிறகு மாலையில் மீண்டும் நயினார் நாகேந்திரன் பின்னடைவை சந்தித்தார்.
நயினார் நாகேந்திரன் தோல்வி
இறுதியில் நயினார் நாகேந்திரன் தோல்வியை தழுவினார். திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் மொத்தம் 62,060 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நயினார் நாகேந்திரன் 56,071 வாக்குகள் வாங்கி 5,989 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
தவெக வேட்பாளர் அஜித் 53,498 வாக்குகள் வாங்கி 3ம் இடம் பிடித்தார். சசிகலா நிறுத்திய வேட்பாளர் இசக்கி ராஜா 11,602 ஓட்டுகள் வாங்கி 4ம் இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆனந்தராஜா 9,235 வாக்குகள் பிடித்து 5 ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
சசிகலா வேட்பாளரால் தோற்ற நயினார்
இந்த சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயத்தினர் 27 சதவீதம் பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதனால் தான் அவர் சாத்தூரை தேர்வு செய்தார். ஆனால் சசிகலா நிறுத்திய வேட்பாளர் இசக்கிராஜா முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர். அவர் 11,602 வாக்குகள் பெற்ற நிலையில் அதுவே நயினார் நாகேந்திரனின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அதுமட்டுமின்றி முதலிலேயே இந்த தொகுதியில் நயினார் நாகேந்திரனின் வெற்றி எளிதாக இருக்காது என்று கூறப்பட்டது. ஏனென்றால் பல சவால்கள் உள்ளன. இதனால் தான் அனைத்து கருத்து கணிப்புகளும் இழுபறி என்று தெரிவித்துள்ளன. இன்னும் சொல்லப்போனால் சாத்தூர் சட்டசபை தொகுதியில் ஒருமுறை கூட பாஜக வெற்றி பெற்றது இல்லை.
1952 - எஸ். ராமசாமி நாயுடு - காங்கிரஸ்
1957 - கே. காமராஜ் (மறைந்த முன்னாள் முதலமைச்சர்) - காங்கிரஸ்
1962 - கே. காமராஜ் - காங்கிரஸ்
1967 - எஸ். ராமசாமி நாயுடு - சுதந்திராக் கட்சி
1971 - எஸ். அழகு தேவர் - பார்வர்டு பிளாக்
1977 - கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் - அதிமுக
1980 - கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் - அதிமுக
1984 - கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் - அதிமுக
1989 - எஸ். எஸ். கருப்பசாமி - திமுக
1991 - கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் - தாயக மறுமலர்ச்சி கழகம்
1996 - கே. எம். விஜயகுமார் - திமுக
2001 - கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் - திமுக
2006 - கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் - திமுக
2011 - ஆர். பி. உதயகுமார் - அதிமுக
2016 - எஸ். ஜி. சுப்பிரமணியன் -அதிமுக
2019 - (இடைத்தேர்தல்) - எம். எஸ். ஆர். ராஜவர்மன் -அதிமுக
2021 - ஏஆர்ஆர் ரகுராமன் - மதிமுக (திமுக கூட்டணி) என விருதுநகர் தேர்தல் வரலாறு அமைகிறது. இப்போது திமுகவின் கடற்கரை வென்று எம்எல்ஏவாகி உள்ளார். நயினார் நாகேந்திரன் தொகுதி மாறி வெல்லலாம் என்ற முயற்சி கைகூடவில்லை.












Click it and Unblock the Notifications