சேலத்தில் கொடூரம்: பள்ளி மாணவியை நிர்வாணமாக்கி தாக்கிய அதிமுக பிரமுகர்
சேலம்: சேலம் மாவட்டத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் தமது மகனின் காதல் விவகாரத்தில் மாணவியை நிர்வாணமாக்கி தாக்குதல் நடத்திய குரூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாரமங்கலம் அருகே உள்ள தெசவிளக்கு தெற்கு கிராமத்தை சேர்ந்த கந்தன் என்பவரின் மகள் சுமதி வயது 16,( பெயர் மாற்றம்). இவர் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார்.
அதே பகுதியை சேர்ந்த பால் கூட்டுறவு சங்க தலைவரும், அ.தி.மு.க கிளை செயலாளருமான விஸ்வநாதன் என்பவரின் மகன் சந்தோஷ் (எ) சாமிநாதன் (17). இவர் சேலத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் படிக்கிறார்.
இதனிடையே, சுமதியை சாமிநாதன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். சுமதி பள்ளிக்கு சென்று வரும் போது வழிமறித்து தன்னை காதலிக்குமாறு தொந்தரவு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சுமதிநேற்று தனது தாயுடன் வீட்டில் இருந்த போது, சாமிநாதன் வீட்டுக்குள் புகுந்து தன்னை காதலிக்காவிட்டால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி மிரட்டிவிட்டு சென்றுள்ளார்.
இதை அறிந்த சாமிநாதனின் தந்தை விஸ்வநாதன், தாய் செல்வி மற்றும் உறவினர்கள், கந்தனின் வீட்டுக்கு சென்று, எனது மகனை வளைத்து போட நினைக்கிறீர்களா? என்று கூறி, சுமதி மற்றும் அவரது தாயை நிர்வாணப்படுத்தி சரமாரியாக தாக்கியுள்ளனர்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டதால், அவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். தாக்குதலில் காயம் அடைந்த தாய், மகள் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி தாரமங்கலம் காவல்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சுமதியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் இன்று காலை தாரமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த தாக்குதல் தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரித்து வருவதாகவும், மற்றவர்களை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications