சேகர் ரெட்டிக்கு ஜாமீன் கிடைக்குமா.. 27ம் தேதி விசாரணை ஒத்தி வைப்பு
கோடிக்கணக்கில் பணம் தங்கம் பதுக்கி வைத்திருந்த சேகர் ரெட்டியின் ஜாமீன் மனு வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: கட்டுக்கட்டாக பணமும், கட்டிக்கட்டியாக தங்கமும் பதுக்கி வைத்திருந்த சேகர் ரெட்டியின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகே அவருக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் ஜாமீன் கிடைக்குமா இல்லையா என்பது தெரியவரும்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி. போயஸ் கார்டனுக்கு மிகவும் நெருக்கமான இவருக்கு தமிழக பொதுப்பணித்துறை ஒப்பந்தங்கள் அள்ளிக் கொடுக்கப்பட்டன. இதுதவிர கட்டுமான தொழிலிலும் ஈடுபட்டு வந்த சேகர் ரெட்டிக்கு தமிழக அரசில் உள்ள உயர் அதிகாரிகளின் துணை இருந்ததால் பல்வேறு துறைகளின் ஒப்பந்தங்களும் கண்மூடித்தனமாக கொடுக்கப்பட்டு வந்தன.

கணக்கில்லாமல் கோடிக்கணக்கில் சேகர் ரெட்டியிடம் பணம் குவிந்திருப்பது தொடர்பாக வருமானவரித்துறைக்கு தகவல் கிடைத்ததையடுத்து, சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாசலு ரெட்டி மற்றும் நண்பர் பிரேம் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில் 136 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதில், 92 கோடி ரூபாய் புதிதாக அச்சிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 177 கிலோ தங்கக்கட்டிகளும் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர் சீனிவாசலு ரெட்டி ஆகியோரை சிபிஐ போலீசார் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை குற்றச்சதி, நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் திடீரென கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி மற்றும் சீனிவாசலுவை ஜனவரி 3ம் தேதி வரை காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று சேகர் ரெட்டியும் அவரது உறவினர் சீனிவாசலு ரெட்டியும் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் வந்த போது சி.பி.ஐ. வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டதை அடுத்து, விசாரணையை வரும் 27ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது. மேலும், சேகர் ரெட்டியை காவலில் எடுக்கக் கோரிய சி.பி.ஐ. மனு மீதான விசாரணையும் வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications