ஆளுநருக்கு எதிராக யார் பேசினாலும்.. ஸ்டாலினுக்கு ஆபத்தாக முடியும்.. தடதடக்கும் எச்.ராஜா!
சென்னை: ஆளுநருக்கு எதிராக யார் பேசினாலும் அது முதல்வர் ஸ்டாலினுக்கு தான் ஆபத்தாக முடியும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் அரசியலில் இருந்து விலகியதாக சொல்லியது எதனால் என்பது குறித்தும் எச்.ராஜா பேசியுள்ளார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தால் அதற்கு, நாகரிகமாக ஒப்புதல் அளிக்கவில்லை என்பது பொருள் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த சில தினங்களுக்கு முன்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது கூறியிருந்தார்.
அது மட்டும் இன்றி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் கூறியது தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளானது. அரசியல் சாசன பொறுப்பில் இருக்கும் ஆளுநரின் இந்த பேச்சு ஏற்புடையது அல்ல என்று அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

ஸ்டாலினுக்கு தான் ஆபத்தாக முடியும்:இந்த நிலையில் ஆளுநருக்கு ஆதரவாக பேசியிருக்கும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, "ஆளுநருக்கு எதிராக யார் பேசினாலும் அது முதல்வர் ஸ்டாலினுக்கு தான் ஆபத்தாக முடியும் என்று தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எச்.ராஜா கூறியதாவது:-
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக உதயகுமார் நடத்திய போராட்டம் குறித்து நாடாளுமன்றத்திலே அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்காவில் இருந்து சில என்.ஜி.ஓக்களுக்கு நிதி அளிக்கப்பட்டு இந்த போராட்டம் நடைபெறுகிறது என்று சொன்னார்.. அவர் ஒன்னும் சங்கி இல்லையே.. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிரான போராட்டம் 100 நாட்கள் நடைபெற்றது.
அந்த போரட்டத்தில் 100 நாட்கள் யாரு நிதி உதவி கொடுத்தது என்ற கேள்வி வருகிறது... இந்த கேள்வியை தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் யாராவது கேட்டார்களா.. இதைப்பற்றி யோசித்தார்களா... அன்னிய தலையீடு இருக்கிறது என்பதற்கு சந்தேகம் இருக்கிறது. மத தலையீடு இருக்கிறது என்பது தெளிவாக தெரிந்தது.

அரசியலில் தொடர்கிறேன்:ஆளுநருக்கு எதிரான சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த எச்.ராஜா, "தீர்மானத்திற்கு மரியாதை இல்லை என்ற நிலையை திமுக அரசு கொண்டு வந்துள்ளது. நாளைக்கு ஆளுநர் ஆதாரங்களை தூக்கி போட்டால் ஸ்டாலின் என்ன சொல்வார். அதுவும் ஆளுநர் எங்கே பேசியிருக்கிறார். ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் முடித்து விட்டு நாளை பொறுப்புக்கு போக இருக்கிறவர்கள் மத்தியில் பேசியிருக்கிறார். ஆளுநர் போலீஸ் அதிகாரி மட்டும் இல்லை. ஆளுநருக்கு எதிராக முட்டாள்தனமாக யாரும் செயல்பட வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

தகவல்களும் தரவுகளும் கைவசம் இருக்கின்றன. சும்மா.. ஆளுநர் மாளிகைக்கு முன்பாக கோஷம் போட்டோம்..ஆளுநரை திட்டு திட்டு என்பதல்ல...ஆளுநர் பேசியது தவறு என்றால் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள்..ஆளுநருக்கு எதிராக பேசினால் நம்மை பெரிய மனுஷன் என நினைத்து விடுவார்கள் என்று..முதல்வரோ அமைச்சரோ.. அல்லது.. திருமாவளவன் போன்றவர்கள் நினைத்தால் அது ஸ்டாலினுக்கு ஆபத்தாக போகும்.
தமிழிசை சவுந்தரராஜன்,சிபி ராதாகிருஷ்ணன், இல. கணேசன் போன்ற மூத்த தலைவர்கள் உயரிய பொறுப்பிற்கு சென்று விட்டார்கள். இதனால், மாநில தலைவருக்கு உதவியாக எல்லா வேட்பாளருக்கும் பிரசாரம் செய்ய வேண்டும் என்பதால் நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகியிருக்கிறேன். சந்நியாசம் என்ற வார்த்தையை எல்லாம் நான் சொல்லவில்லை. அரசியலில் தொடர்கிறேன் என்றுதான் சொல்லியிருக்கிறேன்.












Click it and Unblock the Notifications