இதுவல்லவோ நேர்மை! தவறவிட்ட ரூ.8.50 லட்சம் ஒப்படைப்பு.. சிவகாசி பெண்ணுக்கு குவியும் பாராட்டு
தவறவிட்ட பணத்தை உரிமையாளரிடம் ஒரு பெண் ஒப்படைத்துள்ளார்.
சிவகாசி: துணிக்கடை உரிமையாளர்கள் தவறவிட்ட எட்டரை லட்சம் ரூபாய் பணத்தை, கடை உரிமையாளரிடமே ஒரு பெண் கண்டெடுத்து ஒப்படைத்துள்ளார். இதனால் அந்த பெண்ணிற்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சிவகாசி அருகே சாட்சியாபுரத்தை சேர்ந்தவர் சிவசங்கரி. இவர் டைலரிங் வேலை செய்து வருகிறார். டைலரிங் வேலைக்காக சிலதுணிகளை வாங்குவதற்கு சிவசங்கரி, தெற்கு ராஜவீதியில் உள்ள ஒரு ஜவுளி கடைக்கு போனார்.

உரிமையாளர் கொடுத்த பணப்பை
தனக்கு தேவையான துணியை வாங்கிவிட்டு அதற்கான பணத்தையும் கடை உரிமையாளரிடம் கொடுத்தார். அவரது பணத்தை பெற்றுகொண்ட கடை உரிமையாளர், வாங்கிவைத்த துணிப்பைக்கு பதிலாக கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்த பையை தவறுதலாக கொடுத்துவிட்டார். அந்த பையில் ரூபாய் எட்டரை லட்சம் ரூபாய் இருந்தது.

விசாரணை ஆரம்பம்
அந்த பையை வாங்கிக் கொண்டு வீடு திரும்பி சிவங்கிரி, பின்னர் பையை பிரித்து பார்த்தார். அதில் பணக்கட்டுக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து மீண்டும் ஜவுளிக் கடைக்கு சென்றார். இவர் செல்வதற்குள், கடை உரிமையாளர்கள் பணப்பையை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்து, அதற்கான விசாரணையும் கடைக்குள் ஆரம்பமாகி இருந்தது.

திருப்பி கொடுத்தார்
கடைக்குள் நுழைந்த தன்னிடமிருந்த பணத்தை கடை உரிமையாளரிடமே திருப்பி கொடுத்தார். அவரது நேர்மையை கண்ட கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த போலீசார் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

உழைத்த பணமே சொந்தம்
இதுகுறித்து கூறிய சிவசங்கரி, "பையில் இருந்த பணம் பெரிய தொகை என்றாலும், உழைத்து சம்பாதிப்பது மட்டும்தான் நமக்கு சொந்தம் என்பதால், பணத்தை திருப்பி தந்துவிட்டேன்" என்றார். சிவசங்கரியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications