கந்த சஷ்டி: திருச்செந்தூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம்- நாளை சூரசம்ஹாரம்
திருச்செந்தூர் சுப்ரமணியர் ஆலயத்தில் கந்தசஷ்டியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டுள்ளனர். நாளையதினம் சூரசம்ஹாரமாகும்.
சென்னை: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது. இதையடுத்து, கோயிலிலேயே தங்கி ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதத்தை தொடங்கினர். வி்ழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 5ம் தேதி நடைபெறுகிறது.
கந்த சஷ்டி விழா முருகப்பெருமானின் ஆலயங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும் விழாவாகும். முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் நடைபெறும் விழாக்களில் முக்கியமானது கந்த சஷ்டி திருவிழா. இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா அக்டோபர் 31ம் தேதி தொடங்கியது.
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு அக்டோபர் 30ம் தேதி முதலே பக்தர்கள் திருச்செந்தூருக்கு பக்தர்கள் வரத் தொடங்கினர். இந்தியா முழுவதும் இருந்தும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்துள்ளனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலிலும், நாழிக் கிணறிலும் நீராடி, யாகசாலை பூஜையில் பங்கேற்று சஷ்டி விரதத்தை தொடங்கினர்.
முதலாம் திருநாளில் இருந்து தினமும் மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

கந்தசஷ்டி
6ம் திருநாளான சனிக்கிழமை கந்தசஷ்டி தினத்தன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெறும். பின்னர் யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். அங்கு தீபாராதனைக்கு பின்னர் சுவாமி திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெறும்.

சூரசம்ஹாரம்
மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி- அம்பாளுக்கு அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் சுவாமி-அம்பாள் பிரகார உலா வந்து கோவில் சேர்கிறார்கள்.

திருக்கல்யாணம்
7ம் திருநாளான நவம்பர் 6ம் தேதி கந்த சஷ்டி விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நடைபெறும். அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. 5 மணிக்கு அம்பாள் தவசு காட்சிக்கு புறப்படுகிறார். காலை 9 மணிக்கு சுவாமிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. அன்று மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் சுவாமி- தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

பக்தர்கள் குவிந்தனர்
கந்த சஷ்டி விழாவில் பல்வேறு வேண்டுதல்களுடன் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சிங்கப்பூர், மலேசியா, லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆறு நாட்களும் கோவிலில் தங்கி இருந்து விரதம் மேற்கொண்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 4 தற்காலிக குடில்கள் மற்றும் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications