தேமுதிக+ ம.ந.கூட்டணியை உடைக்க சிலர் முயற்சி..... பிரேமலதா காட்டம்
திருநெல்வேலி: ஆட்சிக்கு வந்தால் 1 லிட்டர் பெட்ரோல் தமிழகத்தில் 35 ரூபாய்; அனைத்து தொகுதியிலும் பெண்கள் கல்லூரி; வீடு தேடி ரேஷன் பொருள் வரும், காலை உணவும் பள்ளி குழந்தைகளுக்கு வழங்க இருப்பதாகவும் அசராமல் பேசியுள்ளார் தேமுதிக மகளிரணித் தலைவி பிரேமலதா. தேமுதிக + மக்கள் நலக்கூட்டணி இடையே பிளவு ஏற்படுத்த சில தலைவர்கள் முயற்சி செய்வதாகவும் பிரேமலதா சாடியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியோடு இணைந்த தேமுதிக டேக் ஆஃப் ஆகிவிட்டது. தொகுதிகளை அடையாளம் காண்பதற்கு முன்பாகவே தேர்தல் அறிக்கையை விளக்கி நெல்லையில் நெல்லையப்பர் ஆலயம் முன்பாக பிரச்சாரத்தை தொடங்கி விட்டார் பிரேமலதா.
தேமுதிகவின் தேர்தல் அறிக்கையை மக்களிடம் கொண்டு சேர்க்க சரியான ஆள் பிரேமலதாதான் என்று முடிவு செய்துதான் களத்தில் இறக்கியிருக்கிறது தேமுதிக. பிரேமலதாவின் பேச்சில் ஆரம்பம் முதல் இறுதி வரை சற்றும் சூடு குறையவில்லை.

தேமுதிகவின் பயணம்
தே.மு.தி.க. கட்சியை தொடங்கி 2006-ம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் தனித்து போட்டியிட்டு 8.33 சதவீத ஓட்டுகளை வாங்கி சரித்திரம் படைத்தார். 2009 தேர்தலில் 10.3 சதவீத ஓட்டுகள் வாங்கினார். அதன்பின்பு வந்த தேர்தல்களில் அ.தி.மு.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டோம்.

எதிர்பார்ப்பு
எனவே வர இருக்கும் தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும் விஜயகாந்தை தங்களது கூட்டணியில் சேர்க்க அழைப்பு விடுத்தன. இந்தியாவையே தே.மு.தி.க. திரும்பி பார்க்க வைத்துவிட்டது.

நல்ல கூட்டணி
விஜயகாந்த் குழப்பத்தில் இருக்கிறார், தெளிவான முடிவை அவரால் எடுக்க முடியவில்லை என்றெல்லாம் விமர்சனம் செய்தார்கள். 1967ம் ஆண்டில் தமிழக அரசியலில் அறிஞர் அண்ணா திருப்புமுனையை ஏற்படுத்தினார். மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள், விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முன்வந்து சந்தித்து பேசினார்கள். நல்ல கூட்டணி தற்போது அமைந்து இருக்கிறது.

அல்வாவும் வீரமும்
நெல்லையப்பர் கோவில் முன்பு தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்க கூட்டத்தை தொடங்கி இருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். இதுவரை நீங்கள் பல தேர்தலை பார்த்து இருக்கலாம். ஆனால், வர இருக்கும் சட்டமன்ற தேர்தல் புதுமையானது. நெல்லை அல்வாவுக்கு பேமஸ். அது போல் வீரத்துக்கும் பெயர் பெற்றது.

மாணவர்கள் நலன்
தேமுதிக ஆட்சிக்கு வந்தால் 1 லிட்டர் பெட்ரோல் தமிழகத்தில் 35 ரூபாய். அனைத்து தொகுதியிலும் பெண்கள் கல்லூரி தொடங்குவோம், அரசு பள்ளிகளை மாலை நேர கல்லூரிகளாக மாற்றுவோம், வீடு தேடி ரேஷன் பொருள் வரும், காலை உணவும் பள்ளி குழந்தைகளுக்கு வழங்குவோம் என்று கூறினார் பிரேமலதா.

விவசாயிகள் நலன்
கருவேல மரங்களை அகற்றுவோம், சுங்கவரியை பாதியாக குறைக்கபடும். நம்மாழ்வார் என்ற திட்டத்தில் நாற்று நடும் இயந்திரம் மானிய விலையில் வழங்கப்படும் என்று கூறினார்.

பொங்கலுக்கு ஒரு வாரம் லீவ்
தே.மு.தி.க. தேர்தல் அறிக்கையில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். கோவில் அர்ச்சகர்களுக்கு மாத ஊதியம், பொங்கல் விளையாட்டை ஒரு வார காலம் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாட நடவடிக்கை எடுப்போம், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றுத் தருவோம்.

தமிழர்களை மீட்க நடவடிக்கை
விளையாட்டு துறையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும், பேரிடர் காலங்களை திறம்பட கையாண்டு பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்டெடுப்போம், இயற்கை வளங்கள் கொள்ளை போவதை தடுப்போம், வெளிநாடு, வெளிமாநிலங்களில் வேலைக்கு சென்று துயரப்படும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவோம் என்றார் பிரேமலதா.

உடைக்க முயற்சி
மக்கள் நலக்கூட்டணி - தேமுதிக இணைந்து தமிழக சட்டசபைத் தேர்தலில் நல்ல கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியை உடைக்கவும், தலைவர்களிடையை பிளவை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வதாகவும் பிரேமலதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications