தமிழக- இலங்கை மீனவர் பேச்சை முடக்கிய ஜெ.; மோடியிடம் முடங்கிய பாஜக: சோனியா சாடல்!!
கன்னியாகுமரி: தமிழக- இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை நடைபெறுவதை பெரும் தாமதமாக்கியது தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசுதான் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக முதல் முறையாக சோனியா காந்தி இன்று தமிழகம் வந்தார். கன்னியாகுமரியில் தமிழகத்தில் போட்டியிடும் 39 காங்கிரஸ் வேட்பாளர்களையும் ஆதரித்து சோனியா காந்தி பேசியதாவது:
உலக நாடுகளின் பொருளாதாரம் மந்தநிலையில் இருந்த போதும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியினால் நாட்டின் பொருளாதாரம் மிக சிறப்பாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானது 14 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து துறைகளில் பிரம்மாண்ட முதலீடுகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உருவாக்கி வைத்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள், பெண்கள் மேம்பாட்டுக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
தமிழகத்தில் மத்திய அரசின் கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம் மிகப் பெறும் வெற்றி பெற்றுள்ளது. நாங்கள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 77 ஆயிரம் கோடி கடன் அளித்துள்ளோம்.
மாணவர்களுக்கு 55 ஆயிரம் கோடி கல்விக் கடன் கடன் கொடுத்திருக்கிறோம். நிலம் கையகப்படுத்துகிறபோது உரிய நட்ட ஈடு விவசாயிகளுக்கு கிடைக்க சட்டம் நிறைவேற்றியிருக்கிறோம்.
தகவலறியும் உரிமை சட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ் அரசுதான். இந்திய சரித்திரத்தில் எந்த அரசும் செய்யாத சாதனையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மட்டுமே செய்துள்ளது.
ஈழத் தமிழர் பிரச்சனை..
இலங்கையில் வாழும் தமிழருக்காக காங்கிரஸை விட வேறு எந்த அரசு கட்சி உதவி செய்தது? இலங்கைத் தமிழர்களுக்காக ராஜிவ்காந்தி தமது ரத்தத்தையே சிந்தியதை யார்தான் மறுக்க முடியும்?
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கான இந்திய அரசின் உதவிகள் தொடரும். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் சாலைகள், ரயில்வே பாதைகள், பள்ளிகள், மறுவாழ்வுப் பணிகள் மற்றும் அரசியல் தீர்வு காண நடவடிக்கைகளை மேற்கொண்டது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.
இப்படி இலங்கைத் தமிழருக்கு எங்கள் அரசு செய்த உதவிகளையும் சாதனைகளையும் தமிழக அரசியல் கட்சிகள் தவறாக பிரசாரம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மீனவர்கள் பேச்சுவார்த்தை முடக்கம்
எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் துயரத்தை நான் நன்கு அறிவேன். இந்த மீனவர்களின் துயரத்தைத் துடைத்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.
தமிழக- இலங்கை மீனவர் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது மத்திய அரசு. ஆனால் தமிழக- இலங்கை மீனவர் பேச்சுவார்த்தைக்கு அதிமுக அரசு பெரும் காலதாமதம் செய்தது.
பாஜக மீது பாய்ச்சல்
இந்த தேர்தலில் மதவாதம், பணவாதம், அதிகார மோகம்தான் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. மதவாதிகள் தேசத்தை பிரிக்கும் சூழ்ச்சியை செய்கிறார்கள்.
தேசம் மதத்தின் பெயரில் பிரிந்தால் நாட்டின் அமைதி- வளர்ச்சி என்னவாகும்?. பாரதிய ஜனதா கட்சி ஒரு தனிநபரிடம் மாட்டிக் கொண்டிருக்கிறது.
அந்த தனிநபரோ இந்தியாவின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தம்மிடம் இருப்பதாக காட்டிக் கொள்கிறார். நமது தேசம் அத்தகைய தனிநபரிடம் சிக்கிவிடக் கூடாது என எச்சரிக்கிறேன்
தனித்துவிடப்படவில்லை..
தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துவிடப்பட்டவில்லை என்பதை இந்த கூட்டம் காட்டுகிறது. தமிழகத்தில் காங்கிரஸை தனிமைப்படுத்திவிட எவராலும் முடியாது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் போது அனைவருக்கும் மருத்துவ வசதி, ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு வீடு, முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியத்தை உரிமையாக்குவோம் என்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
மேலும் கன்னியாகுமரிக்கு இரட்டை ரயில் பாதை, விமான நிலையம், மத்திய பல்கலைக் கழகம் ஆகியவற்றையும் அமைப்போம் என உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications