தேர்தல் பணியை தொடங்கிட்டோம்... கூட்டணி பற்றி சோனியா முடிவெடுப்பார்: குஷ்பு
ஈரோடு: தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டதாகவும், கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவும், துணைத் தலைவர் ராகுலும் முடிவு செய்வார்கள் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், தேர்தல் ஆயத்தபணிகளை கட்சிகள் முன்கூட்டியே தொடங்கிவிட்டன. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நகர காங்கிரஸ் அலுவலக கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் செய்தி தொடர்பாளரான குஷ்பு, அதனைத் தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றார்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தார் குஷ்பு. அப்போது அவர் கூறியதாவது:-

மீனவர் பிரச்சினை...
தமிழக மீனவர் பிரச்சனை குறித்து மத்திய, மாநில அரசுகள்தான் முடிவு எடுக்க வேண்டும்.

பதான்கோட் தாக்குதல்...
பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் ராணுவ விமான தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மத்திய அரசுக்கு இதுபற்றி முன்கூட்டியே தகவல் கிடைத்தும் ராணுவத்தை பாதுகாப்புக்கு பயன்படுத்தவில்லை.

வீணான யோசனை...
சரியாக பாதுகாப்பு வழங்காமல் 24 மணிநேரத்தை வீணாக்கி யோசனை செய்துள்ளனர். இதனால்தான் 7 ராணுவ வீரர்கள் உயிர் இழந்துள்ளனர். இதற்கு மத்திய அரசு தான் பதில் சொல்ல வேண்டும்.

தேர்தல் கூட்டணி...
தமிழக சட்டசபை தேர்தலில் எங்களுடைய கூட்டணி யாருடன் என்பது பற்றி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத்தலைவர் ராகுல் காந்தியும் தான் முடிவு செய்வார்கள்.

தேர்தல் பணி...
நாங்கள் தமிழகத்தில் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பற்றி நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை.

வெற்றியை தீர்மானிக்கும் சக்தி...
பலகட்சியினர் தே.மு.தி.க. தலைவரை போய் பார்க்கிறார்கள். கூட்டணி குறித்து பேசுகிறார்கள். ஆனால் அவர்களது வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக விஜயகாந்த் திகழ்கிறார்' என இவ்வாறு குஷ்பு தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
