அம்பலமாகிறது சிறிசேனாவின் நிஜ முகம்?
நாகப்பட்டினம்: இலங்கை அதிபர் சிறிசேனாவும், முந்தைய இலங்கை அதிபர்கள், பிரதமர்களைப் போலத்தான் என்பதை நிரூபிப்பதாக உள்ளது அவரது நடவடிக்கைகள். தமிழக மீனவர்கள் குறித்த உத்தரவினை வெளியிட்ட இரண்டு நாட்களில் 33 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் இதற்கு நல்ல உதாரணமாக உள்ளது.
மேலும் மீனவர் விவகாரத்தில் மத்திய அரசு கொஞ்சம் கூட உணர்வில்லாமல் இருப்பதும் இலங்கைக்கு மிகவும் வசதியாகப் போய் விட்டது.

இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், அப்படி அவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் வந்து மீன்பிடித்தால் படகுகளுடன் அவர்களை கைது செய்யுமாறு கடற்படைக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் இலங்கை அதிபர் சிறிசேனா நேற்று முன்தினம் தன்னை சந்தித்த வடக்கு மாகாண மீனவ பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். அவ்வாறு கூறிய இரண்டு நாட்களுக்குள் 33 தமிழக மீனவர்களைப் பிடித்துச் சென்றுள்ளனர்.
ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொல்வது, படகுகளுடன் சிறைபிடித்து செல்வது, மீனவர்களின் விலை உயர்ந்த மீன்பிடி கருவிகளை அபகரித்து செல்வது போன்றவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கடற்கரை பகுதியில் இருந்து 33 மீனவர்கள் 5 விசைப்படகுகளில் கடந்த 30 ஆம் தேதி ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று மாலை 6 மணி அளவில் நாகையில் இருந்து 60 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு சிறிய வகை கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர்.
பின்னர் அவர்கள் துப்பாக்கிகளுடன் மீனவர்களின் படகில் ஏறி 33 மீனவர்களையும் சிறை பிடித்தனர். 33 பேரையும் அவர்களது விசைப்படகுகளுடன் இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர்.
இலங்கையில் சிறிசேனா தலைமையில் புதிய அரசு பதவியேற்ற பின் தமிழக மீனவர்கள் மீதான அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மீனவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை அனுமதிக்க மாட்டோம், கைது செய்வோம் என்று சிறிசேனா அறிவித்திருந்தார். மேலும் கைது செய்யும் உத்தரவையும் கடற்படையினருக்கு அவர் பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவு வந்த ஒரு நாள் கூட ஆகவில்லை. அதற்குள் 33 நாகை மீனவர்களைக் கைது செய்துள்ளது இலங்கை.
இலங்கையில் யார் அரச தலைவராக வந்தாலும் இப்படித்தான் நடப்பார்கள், இதுதான் அவர்களது சுயரூபம் என்று தமிழக மீனவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications