ஸ்மால் பஸ், குடிநீர் பாட்டிலில் ஜெ. படத்தை மறைக்க மு.க. ஸ்டாலின் வழக்கு
சென்னை: தமிழக அரசின் ஸ்மால் பஸ், குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றில் உள்ள முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை படங்களை மறைக்கக் கோரி திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அரசின் ஸ்மால் பஸ், அம்மா குடிநீர் பாட்டில்கள், அரசு சிமெண்ட் ஆகியவற்றில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை படங்கள் உள்ளன. இந்த படங்களை மறைக்கக் கோரி திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஏற்காடு இடைத்தேர்தலின்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் ஸ்டாலினின் வழக்கறிஞர் நீலகண்டன் இன்று நீதிபதி ராஜா முன்பு ஆஜராகி கூறுகையில்,
அரது பொது நிறுவனங்கள் மூலம் குடிநீர் பாட்டில்கள் மற்றும் சிமெண்ட் விற்பனை செய்யப்படுகிறது. அதில் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படமும், இரட்டை இலை படமும் உள்ளன. மேலும் அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் ஸ்மால் பஸ்களிலும் இதே போன்ற படங்கள் உள்ளன.
முதல்வரின் நலத்திட்டங்கள் பற்றி விளம்பரம் செய்யும் எண்ணத்துடன் அரசு பொது நிறுவனங்கள் செயல்படுகின்றன. தற்போது நாடாளுமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனால் அரசின் ஸ்மால் பஸ், குடிநீர் பாட்டில்கள், அரசு சிமெண்ட் பைகளில் உள்ள ஜெயலலிதா மற்றும் இரட்டை இலை படங்ளை திரையிட்டு மறைக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். இது குறித்து நான் மனு தாக்கல் செய்யவிருக்கிறேன். அதை அவசர வழக்காக கருதி இன்றே விசாரிக்க வேண்டும் என்றார்.
அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி அவசர வழக்கு மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்தார். அந்த மனு வரும் 10ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications