எடப்பாடி குடுமி பாஜக கையில இருக்கு.. என்ன குடுமினு தெரியுமா? சரமாரியாக விளாசிய ஸ்டாலின்!
சென்னை: தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின்.
ஈரோட்டில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு பதில் அளித்துப் பேசினார். மேலும், "எடப்பாடி பழனிசாமியின் குடுமி பா.ஜ.க கையில் இருக்கிறது! என்ன குடுமி? ஊழல் குடுமி!" எனப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

பொய் பேசும் பழனிசாமி: ஸ்டாலின் பேசுகையில், "ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளில் 10 விழுக்காட்டைக்கூட நிறைவேற்றவில்லை என்று 'பச்சைப் பொய்' பழனிசாமி பொய்ப் பிரச்சாரம் செய்கிறார். ஒவ்வொரு முறை மக்களைச் சந்திக்கும்போதும், தி.மு.க. நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகளைப் புள்ளிவிவரங்களோடு சொல்கிறேன். ஆனால், பழனிசாமியோ இந்தச் செய்திகளையும் பார்ப்பது இல்லை. சட்டமன்றத்தில் சொல்லும்போதும் கேட்பதில்லை. மீண்டும் மீண்டும் பொய் பேசுவதை மட்டுமே வழக்கமாக வைத்துக் கொண்டு இருக்கிறார்! இவர் என்ன நினைக்கிறார் என்றால், இப்படி பொய் பேசினால் அவர் ஏமாற்றியதை மக்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைக்கிறார்!
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், இலவச செல்போன் தருவோம் என்றார்கள், தந்தார்களா? அனைத்து மகளிருக்கும் ஸ்கூட்டி தருவோம் என்றார்களே! தந்தார்களா? அம்மா வங்கி அட்டை தரப்படும் என்று சொன்னார்களே... யாருக்காவது கொடுத்தார்களா? பட்டு ஜவுளிப் பூங்காவை உருவாக்குவோம் என்று சொன்னார்களே... உருவாக்கினார்களா? இதெல்லாம் வெறும் ட்ரெய்லர்தான்! மொத்தமாகச் சொல்ல நேரம் பத்தாது!
எது கூட்டணி தர்மம்?: பாஜக டைரக்ஷனில் நடக்கும் அதிமுக - பாஜக கள்ளக் கூட்டணிக்கு, பாதம்தாங்கி பழனிசாமி புதியதாக ஒரு கதை சொல்லியிருக்கிறார்! டயலாக் என்ன தெரியுமா? பா.ஜ.கவின் கூட்டணியில் இருந்ததால், விமர்சிக்க மாட்டாராம்! என்ன ஒரு பதில்! உண்மை அது இல்லை! அவரால் ஒருபோதும் பிரதமர் மோடியையோ, அமித்ஷாவையோ, ஆளுநரையோ.. ஏன், பா.ஜ.கவில் இருக்கும் யாரையும் விமர்சிக்க முடியாது. ஏன், என்றால் எஜமான விசுவாசம்! பதவி சுகத்திற்காகவும் - ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும் பா.ஜ.கவின் அத்தனை மக்கள் விரோதத் திட்டங்களையும் ஆதரித்தவர் பழனிசாமி!
ஆட்சியில் இருக்கும்போது வைத்த கூட்டணியை இப்போதும் ரகசியமாகத் தொடர்ந்துகொண்டு இருக்கிறார். இதற்குச் சுற்றி வளைத்து அவர் கண்டுபிடித்த காரணம்தான் கூட்டணி தர்மம்! காலில் தவழ்ந்து சென்று முதலமைச்சர் பதவியை வாங்கிய, அம்மையார் சசிகலாவைப் பற்றி நீங்கள் பேசாத பேச்சா? இது என்ன மாதிரியான தர்மம்? கூடவே இருந்த தர்மயுத்தம் ஓ.பி.எஸ்க்குப் பொதுக்குழுவில் வாட்டர் பாட்டில் மரியாதை செய்தீர்களே! அது என்ன தர்மம்? இப்போது சமீபத்தில் கூட, உங்கள் கூட்டணியில் இருந்து சென்ற அய்யா ராமதாசை நீங்கள் விமர்சிக்கவில்லையா? இது என்ன கூட்டணி தர்மத்தில் வராதா?
ஊழல் குடுமி பாஜக கையில்: பாதம்தாங்கி பழனிசாமி அவர்களே! உங்களால், ஒருபோதும் பா.ஜ.கவை விமர்சிக்க, எதிர்க்க முடியாது! அதற்குத் துணிவு வேண்டும்! முதுகெலும்பு வேண்டும்! ஏன் என்றால், பழனிசாமியின் குடுமி பா.ஜ.க கையில் இருக்கிறது! என்ன குடுமி? ஊழல் குடுமி! அ.தி.மு.கவின் ஊழல்கள் என்பது, கன்னித்தீவு கதை மாதிரி! அதில் பழனிசாமியின் அத்தியாயத்தை மட்டும் சொல்ல வேண்டும் என்றால், சம்பந்திக்கும், சம்பந்தியின் உறவினருக்கும் காண்ட்ராக்ட் கொடுத்துச் சாதனை செய்தவர் பழனிசாமி!
சம்பந்திக்கு டெண்டர் கொடுப்பதில் என்ன தவறு என்று சொன்னவர்தான் பழனிசாமி! "யார் மேல்தான் ஊழல் புகார் இல்லை" என்ற எகத்தாளமாக டெல்லியில் பேட்டி கொடுத்தவர் பழனிசாமி! குட்கா வியாபாரிகளிடம் மாமூல் வாங்கும் அமைச்சரை வைத்து, ஆட்சி நடத்தியதும் பழனிசாமிதான்! இன்றைக்கும் சி.பி.ஐ நீதிமன்றத்தில் அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது! இப்படி வாய்கிழிய ஊழலுக்கு வக்காலத்து வாங்கும் பழனிசாமிக்கு, தி.மு.க.வைப் பற்றிப் பேச என்ன யோக்கியதை இருக்கிறது!" எனக் கடுமையாக விமர்சித்தார்.
மோடியையும் விட்டு வைக்கல: தொடர்ந்து பேசிய ஸ்டாலின், "12 ஆண்டு காலம் குஜராத் முதலமைச்சராக இருந்து, மாநில உரிமைகளைப் பேசிய மோடி, டெல்லிக்கு சென்று பிரதமரானதும், மாநிலங்களை அழிக்கத் துடியாக துடிக்கிறார். மாநிலங்களுக்கு என்று எந்த அதிகாரங்களும் இருக்கக் கூடாது; மொத்த அதிகாரமும் தன்னுடைய பாக்கெட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சர்வாதிகாரியைப்போல் நினைக்கிறார்.
பிரதமர் மோடி அவர்களே... நீங்கள் எஜமானர் அல்ல! மக்கள்தான் உங்களுக்கு எஜமானர்கள்! அதை மறந்துவிடாதீர்கள்! ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், இன்னமும் மக்களிடம் நீங்கள் வாக்கு கேட்டு வருகிறீர்கள்! நீங்கள் எப்படிப்பட்ட தோல்வி பயத்தில் இருக்கிறீர்கள் என்று, சிலிண்டர் விலையைக் குறைத்ததிலேயே தெரிந்துவிட்டதே! ஆண்டுதோறும் மகளிர் நாள் வருகிறது, அப்போதெல்லாம் குறைக்காதவர், தேர்தல் வருகிறது என்று இந்த ஆண்டு குறைக்கிறார்!
விலையை ஏத்துனது யாரு? குறைப்பதாக சொல்வது யாரு?: சிலிண்டர் விலையை ஏற்றியது யார்? இப்போது குறைப்பதாக நாடகம் நடத்தும் அதே மோடிதான்! தேர்தல் வந்ததால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கிறார். பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்தது யார்? அதுவும், இப்போது குறைப்பதாக நாடகம் நடத்தும் அதே மோடிதான்! இந்த விலைக் குறைப்பு நாடகம் எல்லாம், தங்களின் ஆட்சியில் நாடு எப்படி சீரழிந்தது என்பதை மறைக்க - மக்களை மறக்க வைக்க பா.ஜ.க. போடும் திட்டம்!" எனக் காட்டமாகப் பேசியுள்ளார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications