மாதிரிப் பள்ளிகள்: மத்திய அரசுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க கருணாநிதி வலியுறுத்தல்
சென்னை: மத்திய அரசு தனியார் கூட்டணியில் மாதிரிப் பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்குவதற்கு தமிழக அரசு தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மத்திய அரசும் தனியாரும் கூட்டுச்சேர்ந்து ராஷ்ட்ரீய ஆதர்ஷ் வித்யாலயா திட்டத்தின்படி தமிழகத்தில் மாதிரிப் பள்ளிகளைத் தொடங்க உள்ளன.

தனியாருடன் கூட்டுச் சேராமல் தமிழக அரசே நேரடியாக பின்தங்கிய மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகளைத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கல்வியில் பின்தங்கிய பகுதிகள் அல்லாத இடங்களில் மாதிரிப் பள்ளிகளைத் தொடங்க விண்ணப்பம் செய்யுமாறு
தனியாரை கோரும் அறிக்கையை மத்திய அரசு வெளிட்டு, அதன் மீது முடிவெடுக்கப் போவதாகத் தெரிகிறது. இதில் மாநில அரசு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் ஒப்புதலோ, ஆலோசனையோ இல்லாமல் மத்திய அரசே நேரடியாக பொதுத் துறை, தனியார் பங்களிப்புடன் கல்வியில் தனியார் மயத்தை அனுமதிப்பது மிகவும் தவறான முன்மாதிரியாகிவிடும்.
இதற்கு மாநில அரசு அனுமதிக்கவே கூடாது. தமிழக அரசு உடனடியாக தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று ஏற்கெனவே கோரியிருந்தேன்.
மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடும் மற்றொரு முயற்சி இது என்று என்னுடைய கண்டனத்தையும் தெரிவித்துள்ளேன்.
மாதிரிப் பள்ளிகளைத் தொடங்க பாமக நிறுவனர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் இது தொடர்பாக முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநில அரசு மெளனமாக இருப்பது பெரும் புதிராக உள்ளது.
திமுக எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், அந்தப் பிரச்னையை நாமும் எதிர்க்கக் கூடாது என்று அரசு இவ்வாறு உள்ளதா எனத் தெரியவில்லை.
எனவே, மத்திய அரசு கொண்டு வரும் மாதிரிப் பள்ளிகளுக்குத் தமிழகத்தில் அனுமதி கொடுக்க மாட்டோம் என்று தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.
தேவைப்பட்டால், அந்த மாதிரிப் பள்ளிகளை மாநில அரசின் சார்பில் நிறைவேற்ற மத்திய அரசு நிதி உதவி செய்யட்டும் என்று மத்திய அரசுக்கு மாநில அரசு உணர்த்த வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications