விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்… இயக்குநர் கவுதமன் உள்பட 8 பேர் கைது
விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சென்னையில் போராட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற இயக்குநர் கவுதமன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: டெல்லியில் 20 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சென்னையில் இன்று மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று கூடினர்.

அவர்களுடன் திரைப்பட இயக்குநர் வ. கவுதமனும் போராட்டக்களத்திற்கு வந்தார். இதனையடுத்து, மாணவர்கள் மத்திய அரசைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களையும் அவர்கள் எழுப்பினார்கள்.
உடனடியாக போலீசார் போராட்டத்தை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் வ.கவுதமன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications