சென்னையில் சிட்டி பஸ்சை 'கடத்திய' கல்லூரி மாணவர்கள்
சென்னை: டிரைவரை விரட்டிவிட்டு தாங்களே பஸ்சை இயக்கிய மாணவர்களால் பயணிகள் பீதியடைந்து ஓடினர், இதனால் சென்னை காந்தி இர்வின் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை எம்எம்டிஏ காலனி முதல் பிராட்வே வரையில் இயக்கப்படும் 12ஜி பஸ் நேற்று பிற்பகலில் வேப்பேரி, நகர காவல்துறை ஆணையர் அலுவலகம் அருகேயுள்ள காந்தி இர்வின் சாலையில் பயணித்துக்கொண்டிருந்தது. அப்போது பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் சுமார் 150பேர், அந்த பஸ்சில் திபுதிபுவென ஏறினர். அதோடு, பஸ்சின் மேற் கூரையில் பொருத்தப்பட்டிருக்கும், காற்று வெளியேற்றும் துவாரத்தை பிளந்துகொண்டு அப்படியே பஸ்சின் மேற்கூரைக்கு ஏறியுள்ளனர்.

மேலே நின்றபடி நடனமாடிக்கொண்டும், பாட்டுப்பாடிக்கொண்டும் பயணித்துள்ளனர் மாணவர்கள். இதனால் பஸ் மேற்கூரை சேதமடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த பஸ் டிரைவர் அங்கேயே பஸ்சை நிறுத்திவிட்டு கீழே இறங்கிவிட்டார். இதற்கும் அசராத மாணவர்கள் தாங்களே பஸ்சை இயக்க தொடங்கியுள்ளனர்.
இதனால் அச்சமடைந்த பயணிகள் அலறியடித்து பஸ்சைவிட்டு கீழே இறங்கி ஓடிவிட்டனர். இந்த கூத்துக்களால், சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. பஸ்சின் நடத்துனர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் வந்தால் பிரச்சினையாகிவிடும் என்பதை அறிந்து, மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம்பிடித்துவிட்டனர்.
பஸ் தினம் என்ற பெயரில் மாநகராட்சி பஸ்களுக்கும், பொதுமக்களுக்கும் மாணவர்கள் இடையூறு விளைவிப்பதாக கூறி, தொடரப்பட்ட வழக்கில், அதுபோன்ற கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், திடீரென இதுபோல மாணவர்கள் செய்யும் சேஷ்டைகளால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகுவது தொடர்கதையாகிவருகிறது.












Click it and Unblock the Notifications