சார்வாள், லேப்டாப் கொடுங்க... போராட்டம் நடத்தி பள்ளியைப் பூட்டிய மாணவர்கள்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் இலவச லேப்டாப் தராததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பள்ளிக்கூடத்தைப் பூட்டி போராட்டம் நடத்தினர்.
மயிலாடியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. இந்த தகவல் அறிந்ததும் பள்ளியில் 2012-2013ம் கல்வியாண்டில் படித்த சுமார் 48 மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.
எங்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும் என்று கேட்டனர். ஆனால் நிர்வாகம் லேப்டாப் வழங்க மறுத்து விட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் பள்ளியின் முன் பக்க கேட்டை இழுத்து மூடினர். தொடர்ந்து கேட்டின் உள்பக்கமாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இலவச லேப்டாப்பை உடனே வழங்க கோரி கோஷம் எழுப்பினர். பள்ளி நிர்வாகம் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் மாணவர்கள் கேட்கவில்லை.
அதை தொடர்ந்து அஞ்சுகிராமம் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பள்ளி நிர்வாகம் எங்களுக்கு சான்றிதழ் வழங்கியபோது 29-5-2013 அன்று லேப்டாப் வழங்கியதாக கையெழுத்து போட்டுள்ளது. ஆனால் இன்று வரை வழங்கவில்லை. இது தொடர்பாக கேட்டபோது பின்னர் வழங்குவதாக தெரிவித்தனர். ஆகவே எங்களுக்கு இலவச லேப்டாப் வழங்க வேண்டும் என்றனர்.
மாணவர்களின் கோரிக்கையை ஏற்று 2 வாரத்திற்குள் லேப்டாப் வழங்குவதாக நிர்வாகத்தினர் உறுதி அளித்தனர். அதை தொடர்ந்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் திரும்பி சென்றனர்.












Click it and Unblock the Notifications