திருத்தப்பட்ட மீட்டர்களைப் பொருத்த மும்முரம் காட்டும் ஆட்டோ டிரைவர்கள்!
சென்னை: ஆட்டோ மீட்டர்களை திருத்தப்பட்ட கட்டணத்துக்கு மாற்றுமாறு அரசு விடுத்துள்ள கெடு முடிவடைவதால் ஆட்டோ டிரைவர்கள் மீட்டர்களைத் திருத்த பெரும் கியூ வரிசையில் காத்துக் கிடக்கும் காட்சியை சென்னையில் காண முடிகிறது.
முக்கியமாக புறநகர்ப் பகுதி ஆட்டோ டிரைவர்கள்தான் மீட்டர்களை மாற்ற திரண்டு வருகின்றனராம்.
ஆர்டிஓ அலுவலகங்களில் புதிய திருத்தப்பட்ட மீட்டர்களை சோதிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருவதையும் காண முடிகிறது.

மீனம்பாக்கம் ஆர்டிஓ
மீனம்பாக்கம் ஆர்டிஓ அலுவலகத்தின் சோதனை மைதானத்தில் நேற்று மட்டும் 148 ஆட்டோக்களுக்கு திருத்தப்பட்ட மீட்டர்கள் பரிசோதிக்கப்பட்டன. இதில் 67 ஆட்டோக்கள் பிட்னஸ் சான்றிதழுக்காக வந்தவையாகும்.

மீட்டர்களைத் திருத்த மும்முரம்
நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் திருத்தப்பட்ட மீட்டர்களைப் பொருத்துவதிலும், பரிசோதிப்பதிலும் டிரைவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தேவையில்லாமல் எதற்குப் பிரச்சினையில் மாட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் டிரைவர்கள் இருப்பதால் திருத்தப்பட்ட மீட்டரைப் பொருத்த ஆர்வம் காட்டுகின்றனர்.

கூட்டம் கட்டி ஏறுகிறது
ஆனால் மீட்டர்களைப் பொருத்துவதிலும், பரிசோதிப்பதிலும் ஆர்டிஓ அலுவலகங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பெரும் தாமதம் ஏற்படுவதாக ஆட்டோ டிரைவர்கள் புலம்புகிறார்கள். காலையில் போனால் திரும்ப சாயந்திரமாகி விடுவதாக அவர்கள் குறை கூறுகிறார்கள். ஒரு நாள் சவாரி பாழாகி விடுவதாகவும் அவர்கள் வருத்தப்படுகிறார்கள்.

நவம்பர் 15 வரை டைம்
நவம்பர் 15ம் தேதி வரை டிரைவர்களுக்கு அரசு அவகாசத்தை நீட்டித்துள்ளது. ஆனால் பல டிரைவர்கள் இப்போதே பொருத்தி விடுவோம் என்று அவசரம் காட்டி குவிவதால் பெரும் நெரிசலாக காணப்படுகிறது.

ஆரம்பத்தில் மெத்தனம்.. இப்போது அவசரம்
ஆனால், மீட்டர்களைத் திருத்த அரசு ஆரம்பத்தில் உரிய அவகாசம் கொடுத்தது. அப்போது டிரைவர்கள் அதை கண்டுகொள்ளாமல் அசட்டையாக இருந்தனர். ஆனால் திருத்தப்படாத மீட்டர்கள் பொருத்தப்பட்ட ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ய ஆரம்பித்ததால் அதிர்ச்சி அடைந்த டிரைவர்கள் இப்போது திருத்தப்பட்ட மீட்டர்களுக்கு மாறத் தொடங்கியுள்ளனர்.

71,470 ஆட்டோக்கள்
சென்னையில் 71,470 ஆட்டோக்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 61,235 ஆட்டோக்கள் திருத்தப்பட்ட கட்டண பட்டியலை வாங்கியுள்ளன. 24,849 ஆட்டோக்கள் திருத்தப்பட்ட மீட்டர்களைப் பொருத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications