ரேஷன் அட்டைதாரர்களே.. ரேஷன் பொருட்கள் குறித்து புது தகவல்.. இனி நீங்க நிம்மதியா இருக்கலாம்.. சபாஷ்
சென்னை: தமிழக ரேஷன்தாரர்களுக்கு முக்கிய செய்தியை, கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது.. இது ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தந்துவருகிறது.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..
இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன..

ரேஷன் அட்டைகள்: அதேபோல, பொங்கல் பரிசு உள்ளிட்ட நிதியுதவிகளும் அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்படுகின்றன. மற்றொரு புறம், ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவித்தல் போன்றவைகள் குறித்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறைதீர்ப்பு முகாம்: அந்தவகையில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 2023 மார்ச் மாதத்துக்கான குறை தீர்ப்பு முகாம் எப்போது என்கிற அறிவிப்பையும் தமிழக அரசு சமீபத்தில் செய்திருந்தது.. இந்த அறிவிப்பானது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது..
அதேபோல, அடுத்த ஒரு வருடத்துக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை வசதி ஏற்பாடு செய்ய மாதிரி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கடந்த 4 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.. இந்நிலையில், இன்னொரு முக்கிய அறிவிப்பு கூட்டுறவுத்துறை மூலம் வெளியாகி உள்ளது.
அச்சம் வேண்டாம்: அதாவது, தமிழக ரேஷன் கடைகளில் ஊழியர்கள் சில நேரங்களில் அட்டைதாரர்களை அவர்களுக்கு விருப்பமில்லாத பொருட்களை வாங்க வற்புறுத்துவதாக புகார்கள் சமீபகாலமாகவே எழுந்து வருகிறது.. அரிசி, பருப்புடன் உள்ளிட்ட பொருட்களை தவிர, உப்பு, சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.. இந்த பொருட்களை வாங்க சொல்லித்தான், கடை ஊழியர்கள் கட்டாயப்படுத்துகிறார்களாம்.. பொருட்கள் வாங்காவிட்டால் ரேஷன் அட்டை ரத்து என்ற செய்தியும் பகீரை கிளப்பி வந்ததால், கிராமப்புற மக்கள் பெரிதும் அச்சத்திற்கு ஆளாகி விட்டனர்.
இதனால், திட்டமிட்டதைவிட அதிக தொகையை செலவிட நேர்வதாக அட்டைதாரர்கள் குமுறுகிறார்கள். இதுகுறித்து தொடர்ந்து புகார்களை சொல்லி வரும்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே, கூட்டுறவுத்துறை அடுத்த அதிரடியை கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய உணவு மற்றும் கூட்டுறவுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது, ரேஷன் கடைகளில் விருப்பமில்லாத பொருட்களை வாங்க சொல்லி ஊழியர்கள் எக்காரணத்தை கொண்டும் பொதுமக்களை கட்டாயப்படுத்த கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்..

வதந்தியை நம்பாதீங்க: நியாய விலை கடைகளில் அரசால் வழங்கப்படும் பொருட்களை மட்டுமே விநியோகிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக கடந்த ஓராண்டில் மட்டும் 15, 726 வழக்குகள் போடப்பட்டு 140 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. ரேஷன் பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் வாங்கவில்லை என்றால் அட்டை ரத்து செய்யப்படும் என்ற வதந்தியை நம்பவேண்டாம். அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
நிம்மதி உணர்வு: கிராமபுறங்களில் ரேஷன் கடைகளில் கட்டாயப்படுத்தி பொருட்களை பணியாளர்கள் விற்பனை செய்யக்கூடாது. அப்படி விற்பனை செய்ய வேண்டும் என்ற இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லை. மீறி கட்டாயப்படுத்தி பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பொருட்கள் வாங்காவிட்டால் ரேஷன் அட்டை ரத்து என்ற செய்தி கிராமப்புற மக்களை கலக்கத்தில் வைத்திருந்த நிலையில், இதுதொடர்பாக ராதாகிருஷ்ணன் தெளிவாக தற்போது விளக்கம் அளித்திருப்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..












Click it and Unblock the Notifications