செம! தி நகரில் இனி டிராபிக் பிரச்சினையே இருக்காது.. வந்தாச்சு "ஸ்கைவாக்!" நாட்டிலேயே பெரியதாம்! வாவ்
சென்னை: மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் தியாகராய நகரும் ஒன்று.. அங்கே டிராபிக் எப்படி இருக்கும் எனத் தனியாகச் சொல்ல தேவையில்லை. இதனிடையே இதற்குத் தீர்வு ஒரு வழியாகக் கிடைக்க உள்ளது.
தலைநகர் சென்னை எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கும் நகரங்களில் ஒன்றாகும். இப்போது நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்தாலும் இன்னுமே பல துறைகளில் சென்னை வேகமாக வளர்ந்து வருகிறது.
அதிகரிக்கும் மக்கள்தொகை, ஜனநெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சென்னையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் ரொம்வே அவசியமாகிறது. இதற்காகச் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தியாகராய நகர்: சென்னையில் முக்கிய இடங்களில் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும். அப்படியிருக்கும் போது தியாகராய நகர் குறித்து தனியாகச் சொல்லத் தேவையில்லை. நகரில் மக்கள் நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் இடங்களில் ஒன்றாக தியாகராய நகர் இருக்கிறது. தியாகராய நகரில் பேருந்து நிலையத்திற்கும் மாம்பலம் மின்சார ரயில் நிலையத்திற்கும் இடையே சில நூறு மீட்டர் இடைவெளி இருக்கிறது.
பேருந்து நிலையத்தில் இருந்து மாம்பலம் மின்சார ரயில் நிலத்திற்குச் செல்லும் மக்கள் சாலைகளில் தான் நடந்து செல்கிறார்கள். அங்கே போதிய நடைபாதை இல்லாதது, வாகன நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் நடந்து செல்லும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். இதைத் தீர்க்கும் வகையில் பேருந்து நிலையத்தில் இருந்து மாம்பலம் மின்சார ரயில் நிலையம் வரை நடைமேடை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

பெரிய ஸ்கைவாக்: நீண்ட தாமதத்தால் இத்திட்டம் பல காலம் தள்ளிப்போன நிலையில், ஒரு வழியாக இப்போது இந்த திட்டம் நிறைவடைய உள்ளது. இந்த ஸ்கைவாக் மே முதல் வாரத்தில் திறக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 28.45 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த ஸ்கைவாக், தி.நகர் பேருந்து நிறுத்தம் மற்றும் ரங்கநாதன் தெரு, மார்க்கெட் சாலை, மாம்பலம் ரயில் நிலைய படிக்கட்டுகள் வரை இணைக்கப்படுகிறது.
570 மீ நீளமும் 4 மீ அகலமும் கொண்டதாக இருக்கும் இந்த ஸ்கைவாக் நாட்டின் மிக நீளமான ஸ்கைவாக்காக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்கைவாக்கில் தி.நகர் பேருந்து முனையத்தில் ஒரு எஸ்கலேட்டர் இருக்கிறது. அதேபோல தெற்கு உஸ்மான் சாலை (எம்.எல்.ஏ அலுவலகம்) மற்றும் மாம்பலம் ரயில்வேயின் நடைமேம்பாலம் அருகே ரங்கநாதன் தெருவில் இரண்டு லிஃப்ட்களையும் கொண்டுள்ளது.
பாதுகாப்பு வசதிகள்: பாதுகாப்பிற்காக இங்கே பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அவை மாம்பலம் காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. கழிவறை உட்பட அடிப்படை வசதிகளையும் இது கொண்டிருக்கிறது. இத்திட்டம் முதலில் 2016இல் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் இது பல முறை தாமதமானது.

நீண்ட தாமத்திற்குப் பின்னர் இப்போது இந்த பால கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. சில இடங்களில் ஓவியப் பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. சென்னையில் இருக்கும் பல பிரிட்ஜ்களை போல இதிலும் பல கலைப்படைப்புகளும் இடம்பெற்றுள்ளது.
பிரச்சினையே இல்லை: இந்த ஸ்கைவாக் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தவுடன் போக்குவரத்து நெரிசல் மிகுந்த உஸ்மான் சாலை, நடேசன் தெரு அல்லது ரங்கநாதன் தெருவைத் தவிர்த்துவிட்டு மக்கள் நேரடியாக தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து மாம்பலம் ரயில் நிலையத்துக்குச் செல்லலாம். மக்கள் சாலைகளைத் தவிர்ப்பார்கள் என்பதால் வாகனம் செல்லவும் அதிக இடம் இருக்கும். இதன் மூலம் டிராபிக் ஓரளவுக்குக் குறையும்
தியாகராய நகரில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளதால் சாலைகளில் நடக்கவே முடியாத சூழலே இருக்கிறது. நடைபாதைகளும் போதியளவு இல்லாத நிலையில், சாலைகளில் நடப்பதே அச்சமூட்டுவதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் இப்போது அமைந்துள்ள இந்த நடை மேம்பாலம் பெரியளவில் அப்பகுதி மக்களுக்கு உதவவே செய்யும்.












Click it and Unblock the Notifications