பல நாள் காத்திருப்புக்கு பலன்.. இனி ஈஸியாக போகலாம்.. தாம்பரம் மக்களுக்கு சந்தோஷமான செய்தி!
சென்னை: தாம்பரத்தில் ரயில் நிலையம் செல்ல நகரும் படிக்கட்டுடன் கூடிய நடைமேம்பாலத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை திறந்து வைத்தார்.
தாம்பரம் பேருந்து நிலையமும், ரயில் நிலையமும் ஒரே இடத்தில் இருக்கிறது. ஆனால் சாலையை கடப்பது என்பது மிகவும் சவாலான காரியம். தற்போதைய நிலையில் மக்கள் மேம்பாலத்தில் ஏறித்தான் கடக்கிறார்கள். அல்லது சுரங்கப்பாதையை பயன்படுத்தி கடக்கிறார்கள்.
ஆனால் ரயில் நிலையத்திற்கு செல்ல முடியாத நிலையே இருந்தது. ஏனெனில் ரயில் நிலையத்தின் வெளியே பாலம் முடிந்துவிடும். ரயில் நிலையத்தின் உள்ளே செல்ல வேண்டுமானால், ரயில் நிலையத்தின் முன்பகுதியில் இறங்கி தான் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இந்நிலையில் சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஜி.எஸ்.டி. சாலையை கடக்க கடந்த 2021-ம் ஆண்டு ரூ.7 கோடி செலவில் நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. மேலும் இந்த நடைமேடையினை ரயில்வே நிலையத்துடன் இணைக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்காததால் தாமதம் ஆனது.
இதையடுத்து, ரயில்வே அனுமதி அளித்த பின்னர் ரூ.10 கோடி மதிப்பில் டிக்கெட் கவுண்ட்டர் உடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று நிறைவடைந்தது.
மேற்கு தாம்பரத்திலிருந்து தாம்பரம் ரயில் நிலையம் செல்லும் பயணிகள் நகரும் படிக்கட்டுகள் மூலம் ஜி.எஸ்.டி. சாலையை கடந்து நடை மேம்பாலம் வழியாக தாம்பரம் ரயில் நிலையத்திற்கு 1-வது பிளாட்பாரத்திற்கு செல்லலாம். ரயில் நிலையத்துடன் இணைக்கும் நடை மேம்பால பணிகள் முடிவடைந்ததால் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தமிழக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்துவைத்தார்.

நடை மேம்பால பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டிக்கெட் கவுண்ட்டரை நாடாளுமன்ற குழு தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள், தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் ஜி.காமராஜ், மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன் இ.ஜோசப் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications